திமுக கூட்டணியில் கமல்ஹாசன்.. மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை.. 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!

Su.tha Arivalagan
Mar 09, 2024,08:09 PM IST

சென்னை: திமுக கூட்டணியில் மக்கள் நீதிமய்யம் கட்சி இணைந்துள்ளது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு கமல்ஹாசன் தலைமையிலான குழு வருகை தந்த நிலையில் தற்போது அக்கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கி திமுக உடன்பாடு செய்துள்ளது.


இந்த உடன்பாட்டின் மூலம், திமுக கூட்டணியில் இணைந்ததன் மூலம் கமல்ஹாசனின் மாற்று அரசியல் முயற்சிகள் முடிவுக்கு வந்துள்ளதாக எடுத்துக் கொள்ள முடியும். மேலும் பாஜக எதிர்ப்பு அரசியலுக்கு வலுவூட்டும் முயற்சியில் அவர் இறங்குவதாகவும் எடுத்துக் கொள்ள முடியும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.


திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட தொகுதிப் பங்கீடு முடிவடைந்து விட்டது. இன்று மாலை கடைசிக் கட்சியாக காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்று பிற்பகல் வாக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அண்ணா அறிவாலயம் வருகை தந்தார்.




கமல்ஹாசனை அறிவாலயம் வாசலுக்கு வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். கமல்ஹாசன் அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளதன் மூலம் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் இணைவது உறுதியானது. 


திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடத்திலிருந்து ஒன்று கமல்ஹாசனுக்கு தரப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி இல்லாமல் நேரடியாகவே கூட்டணிக்குள் வந்துள்ளார் கமல்ஹாசன். இருப்பினும் மக்களவைத் தேர்தலில் திமுகவிலிருந்து கமல்ஹாசனுக்கு எந்த சீட்டும் ஒதுக்கப்படவில்லை. அதற்குப் பதில், தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்து உதவப் போகிறார் கமல்ஹாசன்.. அதாவது பிரச்சார பீரங்கியாக அவர் மாறுகிறார்.


அதேசமயம், 2025ல் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் (ராஜ்யசபா தேர்தலில்) மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும். இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும், கமல்ஹாசனும் கையெழுத்திட்டுள்ளனர்.


ஒப்பந்தத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் கூறுகையில், நான் வர வேண்டிய இடத்திற்குத்தான் வந்துள்ளேன். இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. இது மக்களுக்கான, தேசத்திற்கான தேர்தல், அதிகாரம், பதவிக்கான தேர்தல் இல்லை. எனவே திமுக கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவோம். மாநிலங்களவைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம் என்று கூறினார் கமல்ஹாசன்.