"டார்ச் லைட்"டை ஆஃப் பண்ணிட்டு.. தகிக்கும் சூரியனை கையில் ஏந்திய கமல்ஹாசன்.. எதிர்காலம் எப்படி?

Manjula Devi
Mar 12, 2024,07:30 PM IST

சென்னை:  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணைந்திருப்பது பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.


"லோக்சபா தேர்தலில் என்னுடைய கட்சி போட்டியிடப் போவதில்லை. சரியான இடத்திற்குத்தான் வந்து சேர்ந்துள்ளேன். கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளித்து தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட போகிறேன்" என்று கமல்ஹாசன் கூறியதை எல்லோராலும் சாதாரணமாக எடுத்துக கொள்ள முடியவில்லை. பலருக்கும் இது ஆச்சரியம்தான்.


அதாவது கமல்ஹாசன், திமுக கூட்டணியில் கமல் இணைந்தது ஆச்சரியம் கிடையாது, அது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் அவரது கட்சிக்கு லோக்சபா தேர்தலில் ஒரு சீட் கூட தரப்படாததுதான்  பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


2018ல் "மய்யம்" கொண்ட புயல்




தமிழ் திரையுலகில் பன்முகத் திறமை கொண்ட நடிகர் கமலஹாசன். எல்லோரும் ரஜினிகாந்த் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, தடாலடியாக அரசியலுக்கு வருவதாக கூறி அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். சொன்னதோடு நிற்காமல், 2018ம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்து, அக்கட்சிக்கான கொடியையும் ஏற்றி வைத்து அரசியலில் நுழைந்தார்.


இதனைத் தொடர்ந்து 2019ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினாலும் கூட 16.13 லட்சம் வாக்குகளை அக்கட்சி பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.  அக்கட்சிக்கு கிட்டத்தட்ட 3.5 சதவீதத்திற்கு மேலான வாக்குகள் கிடைத்தன. அதன் பின்னர் 2021ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் 180 தொகுதிகளில் கமல்ஹாசன் கட்சி போட்டியிட்டு, 12.10 லட்சம் வாக்குகளை பெற்றது. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 2.62 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதேபோல உள்ளாட்சித் தேர்தலிலும் அக்கட்சிக்கு கணிசமான இடங்கள் கிடைத்தன. 


சுணக்கம் காட்டிய கமல்ஹாசன்




தமிழ்நாட்டின் முக்கியக் கட்சிகளில் ஒன்றாக வேகம் பிடித்து வளரத் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேகத்தை கமல்ஹாசனே திடீரென குறைத்துக்கொள்ள ஆரம்பித்தார். பெரி அளவிலான செயல்பாடுகளில் அந்தக் கட்சி ஈடுபடாமல் சுணக்கம் காட்ட ஆரம்பித்தது. அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் கட்சியை விட்டு விலக ஆரம்பித்தனர். கமல்ஹாசனும், நடிப்பு, பிக் பாஸ் என்று பிசியாகத் தொடங்கியதால் கிட்டத்தட்ட கட்சி நடவடிக்கைகள் அப்படியே தேக்க நிலையைக் கண்டன.


தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை இரு முனை அரசியல்தான் இங்கு நிலவி வருகிறது. ஒன்று திமுக இல்லாவிட்டால் அதிமுக.. இதைத் தாண்டி வேறு ஒரு சக்தி இதுவரை வரவில்லை, வர முடியவும் இல்லை. எம்ஜிஆர், கருணாநிதி, பின்னர் ஜெயலலிதா கருணாநிதி, இப்போது மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி என்றுதான் இந்த இரு துருவ அரசியல் நீடித்து வருகிறது. இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பலரும் பலமுறை முயற்சித்துள்ளனர்.


இப்படி ஒரு மாற்றத்தை மனதில் வைத்துத்தான் தேமுதிகவை விஜயகாந்த் ஆரம்பித்தார். வந்த வேகத்தில் அவரும் புயல் கிளப்பினார், ஊர் ஊராகப் போனார், கிராமம் கிராமமாகப் போனார். கருணாநிதியும், ஜெயலலிதாவும் அவரது வேகத்தைப் பார்த்து மிரண்டார்கள் பயந்தார்கள். அவரை தடுக்க என்னென்னவோ செய்து பார்க்கப்பட்டது. ஆனாலும் விஜயகாந்த் சளைக்கவில்லை. வாக்குகளை வாரிக் குவிக்க ஆரம்பித்தார். தான் சந்தித்த முதல் சட்டசபைத் தேர்தலிலேயே விஜயகாந்த் வெற்றி பெற்றார்.. அதுவும் அவருக்கு சற்றும் சம்பந்தமில்லாத விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று அசத்தினார்.


விஜயகாந்த் பாணிக்கு மாறிய கமல்ஹாசன்




இப்படி அதி வேகமாக போய்க் கொண்டிருந்த விஜயகாந்த்துக்குக் கடிவாளம் போட ஜெயலலிதாவும் முயன்றார், கருணாநிதியும் முயன்றார்.. அதில் வெற்றி கிடைத்தது என்னவோ ஜெயலலிதாவுக்குத்தான். அங்குதான் விஜயகாந்த் கட்சியின் முடிவுக்கு முகவுரை எழுதப்பட்டது. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது. தேமுதிக எதிர்க்கட்சியாக உருவெடுத்தது, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். ஆனால் இந்தக் கூட்டணி நிலைக்கவில்லை. விஜயகாந்த்தும், ஜெயலலிதாவும் மிகப் பெரிய எதிரிகளாக மாறிப் போனார்கள். அதன் பிறகு விஜயகாந்த்தின் அரசியல் பின்னடவைச் சந்திக்க ஆரம்பித்தது. தொடர்ந்து தோல்விகளே தேமுதிகவுக்குக் கிடைத்தன. இதுவரை ஒரு வெற்றியைக் கூட தேமுதிகவால் சந்திக்க முடியாத நிலைதான் நிலவுகிறது. மாற்றம் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்த் இன்று இல்லை, அவரது கட்சியும் நாலு சீட், 5 சீட்டுக்காக அதிமுக, பாஜகவிடம் கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. 


மறுபக்கம் நாம் தமிழர் கட்சி மாற்றத்தைத் தருவோம் என்று தொடர்ந்து கூறி பல வருடங்களாக அரசியல் செய்து வருகிறது. ஆனால் இன்னும் அந்தக் கட்சிக்கு மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குகளைப் பிரிக்கும் கட்சியாக மட்டுமே நாம் தமிழர் கட்சி இருக்கிறதே தவிர்த்து, அதனால் பெரிய அளவில் இதுவரை ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. ஆனாலும், யாருடனும் கூட்டணி சேராமல், தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து தனி ஆளாக போராடி வருகிறார் சீமான்.


தகர்ந்து போன "மாற்றம்" கனவு




இந்த சூழ்நிலையில் நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் புதிய மாற்றத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த லோக்சபா தேர்தலில் அது தகர்ந்து போய் விட்டது. விஜயகாந்த் எடுத்த தவறான முடிவுதான் தேமுதிகவை காலி செய்தது. கிட்டத்தட்ட கமல்ஹாசனும் அதேபோன்ற ஒரு முடிவைத்தான் தற்போது எடுத்துள்ளார். கூட்டணி அரசியலுக்குள் கமல்ஹாசன் புகுந்திருப்பது.. அதுவும் எந்த சக்திகளுக்கு மாற்றாக தான் வர வேண்டும் என்று நினைத்து அரசியலுக்கு வந்தாரோ, அந்த சக்திகளில் ஒன்றுடன் கை கோர்த்துள்ளார் கமல்ஹாசன். இதன் மூலம் மாற்றம் தருவேன் என்று அவர் சொன்ன வாதத்தை அவரே முறியடித்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.


இருப்பினும் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.. விஜயகாந்த் அதிமுகவுடன் சேராமல், திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், நிச்சயம் அந்தக் கட்சி உடைந்திருக்காது, உயிர்ப்புடன் இருந்திருக்கும்.. ஒரு சக்தியாக வலம் வந்திருக்கும். அதிமுகவுடன் கூட்டணி வைத்ததுதான் தேமுதிகவுக்கு பேரிழப்பானது. அந்த வகையில் கமல்ஹாசன் சரியான முடிவையே எடுத்துள்ளார். நிச்சயம் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு உரிய அங்கீகாரத்தை திமுக தரும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.


மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்தது முதல் டார்ச் லைட் சின்னத்தில்தான் அக்கட்சி மக்களை சந்தித்து வந்தது. முதல் முறையாக டார்ச் லைட் இந்த தேர்தலில் ஆஃப் ஆகியுள்ளது. டார்ச் லைட்டுடன் மக்களைச் சந்திக்க வலம் வந்த கமல்ஹாசன் முதல் முறையாக உதய சூரியனுக்காகவும், கைக்காகவும், கதிர் அரிவாள் சின்னத்திற்காகவும், பம்பரத்திற்காகவும் மக்களிடம் வலம் வரப் போகிறார்.  இது மக்களுக்கு நிச்சயம் சிறிது ஏமாற்றம்தான்.


ஒரு சீட்டாவது தந்திருக்கலாம்




ஒரு சீட்டாவது கமல்ஹாசனுக்குக் கொடுத்திருக்கலாம்.. அவரை மக்களின் பிரதிநிதியாக டெல்லிக்கு அனுப்பியிருக்கலாம்.. ராஜ்யசபா எம்.பி பதவி என்பது  சரிதான்.. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவைக்கு கமல்ஹாசன் சென்றிருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும் என்பது பலரின் ஆதங்கமாக உள்ளது.


கட்சியை ஆரம்பித்து மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பில்  "ஏமாற்றிய" தலைவர்கள் வரிசையில் விஜயகாந்திற்கு அடுத்து தற்போது கமலஹாசன் இணைத்துள்ளார். இது தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.