கதையல்ல நிஜம்.. கல்வியா? கல்யாணமா? - Short தொடர் கதை.. பாகம் 3
- ஸ்வர்ணலட்சுமி
சாருமதி திருமணமாகி உதகையில் உள்ள பார்சன்ஸ்வேலி பகுதியில் தனிக்குடித்தன வாழ்க்கையை துவங்கினாள். அதோடு படிப்பையும் தொடர்ந்தாள். சாருமதி மருத்துவம் படிக்கும் கனவில் இருந்தவள். இதனால் பள்ளியில் அவள் படித்தது அறியவில் பிரிவு. ஆனால் மதுரை காமராஜ் யுனிவர்சிட்டியில் அவள் சேர்ந்ததோ பிபிஏ. அதனால் அக்கவுண்டன்சி படிக்க வேண்டி இருந்தது. வேறு வழியில்லாமல் பள்ளி மாணவர்களின் அக்கவுண்டன்சி புத்தகத்தை வாங்கி படித்தாள் சாருமதி.
முதல் வாரத்தில் பதினொன்றாம் வகுப்பு அக்கவுண்டன்சி புத்தகத்தையும், இரண்டாவது வாரத்தில் பனிரெண்டாம் வகுப்பிற்கான அக்கவுண்டன்சி புத்தகத்தையும் படித்து முடித்து விட்டு, கல்லூரியில் பிபிஏ.,விற்கான அக்கவுண்டன்சி புத்தகங்களை படிக்க துவங்கினாள் சாருமதி. முதலாம் ஆண்டு படிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டாள். இரண்டாம் ஆண்டு படிக்கும் போது கர்ப்பம் தரித்தாள் சாருமதி.
வயிற்றில் ஏழு மாத குழந்தையுடன் பரிச்சைக்கு செல்வாள் சாருமதி. வாகனத்தில் பயணம் செல்லக் கூடாது என்பதால் பிரைவேட்டாக டியூஷனுக்கு நடந்தே சென்று படித்தாள். பரீட்சையும் வந்தது. கர்ப்பவதி என்பதால் பரிட்சை ஹாலுக்கு தண்ணீர், பிஸ்கட் சகிதமாக சென்று பரிட்சை எழுதுவாள். தேர்வு மேற்பார்வைக்கு வரும் ஆசிரியர் சாருமதியை ஆச்சரியமும், பரிதாபமும் கலந்து பார்த்தார்.
"நாளையும் வருவியாம்மா?" என கேட்பார் அவர்.
"இன்னும் ஆறு நாட்கள் வருவேன் சார்" என குழந்தைத்தனமாக சொல்லி விட்டு, அடுத்த நாள் தேர்விற்கு தயாராக சென்று விடுவாள் சாருமதி.
தேர்வு எழுதும் அறையில், வயிற்றுக்குள் குழந்தை அசைவதை ரசித்தபடியே ஒவ்வொரு நாள் தேர்வையும் எழுதுவாள் சாருமதி. தன்னுடன் சேர்ந்து தன்னுடைய குழந்தையும் வயிற்றில் இருக்கும் போதே படிக்க துவங்கி விட்டது என ஆனந்தமாகவும், பெருமிதமாகவும் உணர்ந்தபடியே தேர்வை எழுதுவாள் சாருமதி.
இரண்டாம் ஆண்டு பாஸ் செய்து விட்டாள். மூன்றாம் ஆண்டு படிக்கும் போது குழந்தை பிறந்து விட்டது. அப்போதும் பாலூட்டும் நிலையிலும் தன்னுடைய குழந்தையை அம்மாவிடம் விட்டு விட்டு, பரிட்சை எழுதினாள் சாருமதி. இறுதி ஆண்டு பரிட்சையை முடித்து விட்டோம். பட்டம் கைக்கு வர போகிறது. நம்முடைய கனவு நிஜமாக போகிறது என ஆனந்தத்துடன் காத்திருந்த சாருமதிக்கு அங்கேயும் விதி விளையாடியது.
ரிசல்ட் வரும் போது, ஒரு தேர்தவில் சாருமதி "ஆப்சென்ட்" என வந்து விட்டது. அதைக் கண்டு நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது சாருமதிக்கு. தன் அப்பாவிடம் சொல்லி கதறி அழுதாள். மகள் அழுவதை கண்டு பொறுக்க முடியாத சாருமதியின் அப்பா ராஜவேல், நேரடியாக தேர்வு நடந்த மையத்திற்கே சென்று "அடென்டன்ஸ் லிஸ்ட்" எடுத்துக் கொண்டு மதுரை காமராஜர் யுனிவர்சிட்டிக்கு சென்று அங்கு இருப்பவர்களிடம் காட்டி,
"என் மகள் இரண்டாம் ஆண்டு கர்ப்பிணியாக இருந்த போதிலும் வந்து தேர்வு எழுதினாள். மூன்றாம் ஆண்டு, குழந்தை பிறந்த பிறகும் வந்து தேர்வு எழுதினாள். இவ்வளவு கஷ்டப்பட்டு அவள் தேர்வு எழுதியும் எதற்காக சார் ஆப்சென்ட் போட்டுள்ளீர்கள்? அவள் பெயில் ஆகி விட்டாள் என சொல்லி இருந்தால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவள் பரிட்சைக்கு வரவேயில்லை என போட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை" என அவர்களின் அஜாக்கிரதையை எடுத்துரைத்தார்.
அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு சாருமதி தேர்வு எழுதிய பேப்பரை மீண்டும் எடுத்து, அந்த இடத்திலேயே திருத்தி, மார்க் போட்டு, சாருமதியின் புரொவிஷனல் சர்டிபிகேட்டையும் கையோடு ராஜவேலிடம் கொடுத்து விட்டார்கள். அதை எடுத்துக் கொண்டு வந்து காட்டிய போது சாருமதியின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது.
"நானும் பட்டம் பெற்று விட்டேன்" என பெருமை கலந்த, சந்தோஷம் அடைந்தாள் சாருமதி. கல்யாணத்திற்கு முன்பும் சரி, கல்யாணத்திற்கு பிறகும் சரி பல போராட்டங்களை எதிர்கொண்டு, இறுதியாக தன்னுடைய கனவை அடைந்து பட்டம் பெற்றாள் சாருமதி. கல்வி, கல்யாணம் இரண்டிலும் சாதித்து காட்டினாள் சாருமதி.
இப்படித்தான் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பல நிகழ்வுகள் நிகழும்.
"வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா?"
எத்தனையோ பெண்களின் வாழ்க்கை போராட்டங்களைப் போல தான் சாருமதியின் வாழ்க்கையும். இப்படித்தான் பல பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சத்தமே இல்லாமல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
(முற்றும்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்