சந்திரனைத் தொட்ட இஸ்ரோ.. பின்னணியில் பெண்கள் படை.. மலைக்க வைக்கும் Women power!
Aug 24, 2023,06:47 PM IST
பெங்களூரு: நிலவைத் தொட்ட இஸ்ரோவின் சாதனைக்குப் பின்னால் ஒரு பெண் விஞ்ஞானிகள் படையே உள்ளது.
சந்திரயான் 3 திட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. இந்தத்திட்டத்தின் பின்னணியில் இந்திய விஞ்ஞானிகளின் அயராத உழைப்பு அடங்கியுள்ளது. இரவு பகலாக பணியாற்றி இந்தத் திட்டத்தை அவர்கள் வெற்றி பெற வைத்துள்ளனர்.
சந்திரயான் திட்ட இயக்குநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வீர முத்துவேல் செயல்பட்டார். உதவி திட்ட இயக்குநராக செயல்பட்டவர் கல்பனா காளஹஸ்தி என்ற பெண் விஞ்ஞானி ஆவார். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். இந்த இருவரின் தலைமையிலும் மிகப் பெரிய டீம் செயல்பட்டு இந்தியாவுக்குப் பெருமை தேடிக் கொடுத்துள்ளது.
சந்திரயான் 3 திட்டத்தின் உயர் அதிகாிகளாக செயல்பட்டவர்கள் 5 பேர் கொண்ட அணியினர் ஆவர். அதில் கல்பனா மட்டுமே பெண் விஞ்ஞானி ஆவார். இதன் மூலம் இவரது பெயரும் சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளது.
கல்பனா, காரக்பூர் ஐஐடியில் படித்தவர். இஸ்ரோவின் யு.ஆர். ராவ் செயற்கைக் கோள் மையத்தில் 2003ம் ஆண்டு விஞ்ஞானியாக இணைந்தார். சந்திரயான் 2 திட்டத்திலும், மங்கள்யான் திட்டத்திலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
சந்திரயான்3 திட்ட வெற்றிக்குப் பின்னர் கல்பனா பேசுகையில், எங்கள் அனைவருக்கும் மிக மிக மகிழ்ச்சியான தருணம் இது. என்றென்றும் இது நினைவில் இருக்கும். எந்தவிதமான தவறும் இல்லாமல் இந்தத் திட்டம் நல்லபடியாக முடிந்துள்ளது. சந்திரயான் 2 திட்டத்திலிருந்து கிடைத்த அனுபவங்களிலிருந்த நாங்கள் நிறைய பாடம் கற்றுக் கொண்டோம். எனவே எந்த இடத்திலும் தவறு நடக்காமல் திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
எங்களது அணியினர் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டனர். அனைத்து சோதனைகளையும் தவறின்றி செய்து முடித்தனர். அனைவரின் ஒருங்கிணைப்பினால்தான் இந்தத் திட்டம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற முடிந்தது என்றார் கல்பனா.
சந்திரயான் 3 திட்டப் பணிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பெண் என்ஜீனியர்களின் உழைப்பும் அடங்கியுள்ளது என்று இஸ்ரோ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அணியினருக்கு மிகச் சிறந்த உந்து சக்தியாக கல்பனா திகழ்ந்துள்ளார் என்பது பெருமைக்குரியது.