கள்ளச்சாராய நிகழ்வை அரசு நியாயப்படுத்தவில்லை.. நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அமைச்சர் ஏ.வ வேலு
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய சம்பவம் குறித்து அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய அமைச்சர் ஏ.வ வேலு, இதுவரை பலி எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது எனவும், கள்ளச்சாராய நிகழ்வை நாங்கள் நியாயப்படுத்தவில்லை எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் ஏ.வ வேலு, மா. சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.அப்போது சிகிச்சைக்காக தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் மருந்துகள் இருப்பு குறித்து கேட்டறிந்தார்கள்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஏ.வ வேலு கூறியதாவது,
கள்ள சாராயம் குடித்த 132 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விஷசாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை விஷ சாராயத்தால் 38 பேர் மரணமடைந்துள்ளனர். 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து இரண்டு நாட்களில் அறிக்கை அளிக்கும்படி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த 27 குடும்பத்தினருக்கு இதுவரை நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.
விஷச்சாராய விற்பனை தொடர்பாக சிபிசிஐடி ஜஜி அன்பு தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விஷசாராய நிகழ்வை நியாயப்படுத்தவில்லை. காவல்துறை அதிகாரிகள் மீது தவறு இருப்பதன் காரணமாகவே மாவட்ட எஸ்பி உள்ளிட்ட காவல்துறையினர் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்த காவல்துறையினர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலமைச்சர் சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். வரும் நாட்களில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வேலு கூறினார்.
உதயநிதி ஸ்டாலின்:
முன்னதாக உயிரிழந்தவர்களின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூபாய் பத்து லட்சத்துக்கான காசோலையை நேரில் சந்தித்து வழங்கினார்.
விசாரணைக் கமிஷன் அமைப்பு
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டிய நடவடிக்கை பற்றி அரசுக்கு ஆணையம் ஆலோசனை வழங்கும். இந்த ஆணையம் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும். மெத்தனால் கலந்த விஷ சாராய உற்பத்தி தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யவும், கள்ளச்சாராயத்தில் பயன்படுத்தப்பட்ட மெத்தனால் முழுவதையும் கண்டறிந்து கைப்பற்றி அழிக்கவும் முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.