எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலையைத் தொடர்ந்து.. ஆளுநர் ரவியுடன்.. பிரேமலதாவும் சந்திப்பு!

Meenakshi
Jun 28, 2024,05:36 PM IST
சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை கோரி தமிழ்நாடு ஆளுநர்  ஆர். என். ரவியை சந்தித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று மனு அளித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து  150க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 60க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  50க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.



இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்தித்தார். அப்போது விஷசாராயம் விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை கோரி அவர் மனு அளித்துள்ளார்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த பேசுகையில், இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது. இப்படி  நடப்பது  முதல் முறை கிடையாது. முன்னரே நடந்திருக்கு. மரக்காணம், விழுப்புரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் நடந்தபோது நாம் எச்சரித்தோம். எவ்வளவு எச்சரித்தாலும், ஆர்ப்பாட்டம் செஞ்சாலும், உயிர் பழியை தடுக்கின்ற அரசாங்கம் இங்கே இல்லை என்பதை மன வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.

இத்தனை உயிர்கள் பறி போன பிறகு 2000 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழிச்சி இருக்கோம். பலரை அரெஸ்ட் பண்ணி இருக்கோம். அப்படின்னு இப்ப சொல்றாங்க. இப்ப எடுத்த இந்த முயற்சியை முன்கூட்டியே எடுத்து இருந்தால் இத்தனை உயிர்களை நாம் இழக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்ப அரசாங்கம் என்ன செய்கிறது?  டாஸ்மாக் கடைகள் என்பது எதற்காக நடத்தப்படுகிறது. கள்ளச்சாராயம் என்ற ஒன்று  வரக்கூடாது என்பதற்காக தான் டாஸ்மாக். 

இதுக்கு எதுக்கு  டாஸ்மாக். அத்தனை பேரையும் குடிகாரர்களாக மாத்தியாச்சு. அப்படி இருக்கும்பொழுது கள்ளச்சாராயம் எதுக்கு வருது. கள்ளச்சாராயம் எதுக்கு காய்ச்சுறாங்க. இதுக்கு யாரு துணை போறாங்க. ஆட்சியாளர்கள், காவல்துறை அதிகாரிகளின் துணை இல்லாமல் கள்ளச்சாராயம் காய்ச்ச முடியாது. அப்போ ஆட்சியாளர்களின் உதவியோடு காவல்துறையின் உதவியோடு அதிகாரிகளின் உதவியோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது என்பதை ஒட்டுமொத்த கள்ளக்குறிச்சியில் உள்ள மக்கள் சொல்கிறார்கள். அவங்க வறுமையை பயன்படுத்தி கள்ளச்சாராயம், கஞ்சா போன்றவை விற்கப்படுகின்றன. 

ஒட்டுமொத்த கள்ளக்குறிச்சியே ஆளும் கட்சியின் உதவியோடு தான் இது நடக்கிறது என்று சொல்கிறது. இதை மிக மிக மன வேதனையோடு பதிய வைக்கிறேன். இதைத்தான் கவர்னிடமும் நான் முறையிட்டுள்ளேன். அவரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். அந்த கோரிக்கை மனுவில் மொத்த ஆறு பாய்ன்ட்டுகள் வலியுறுத்தி இருக்கேன். அதுல மிக முக்கியமான ஒன்று சிபிசிஐடி ஒன்றும் பிரயோஜனம் இல்லை. இந்த வழக்கை சிபிஐ வழக்காக நிச்சயமாக மாற்ற  வேண்டும். சிபிஐ வழக்கு தான் உண்மை நிலையை கொண்டு வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக குழு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக குழுவினர் ஆளுநரை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த வரிசையில் தற்போது பிரேமலதாவும் இணைந்துள்ளார்.