கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்.. பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு.. 155 பேருக்கு தொடர் சிகிச்சை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நடந்த விஷச்சாராயம் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. 155 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்ட மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.அந்த மருத்துவமனைகளில் அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இதுவரைக்கும் 59 பேர் உயிர் இழந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த ஜான்பாட்ஷா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை பல்வேறு மருத்துவமனைகளில் 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 116 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 11 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 29 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 30க்கும் மேற்பட்டோர்களுக்கு கண் பார்வை பறிபோய் உள்ளது. விஷ சாராயம் குடித்த 95 பேர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.சிபிசிஐடி போலீஸ் சார் விசாரணையில் கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி, சகோதரர், சகோதரரின் மனைவி உள்ளிட்ட 14 பேர் வரை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பென்சிலால், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை, கௌதமன், சிவகுமார் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரும் மெத்தனாலை பெரிய நிறுவனங்களிடமிருந்து வாங்கி தனிநபர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து சிறையில் அடைத்தனர்.
இதுவரை கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தமிழக அரசு இந்த வழக்கில் முழுமையான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தனிநபர் ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.