கள்ளக்குறிச்சி விஷசாராயம் .. தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. உயிரிழப்பு 51 ஆனது

Manjula Devi
Jun 21, 2024,04:26 PM IST
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு 74 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வாந்தி, வயிற்று போக்கு, வயிற்று வலி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, சேலம் மருத்துவமனையில் ஏற்கவவே 10 பேர் உயிரிழந்த நிலையில், மேலும், 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் 28 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், சேலத்தில் 16 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சூழலில், விஷசாராயம் அருந்தி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை தற்பொழுது 51 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தற்போது  மேலும் சோகத்தை அதிகரித்துள்ளது. மேலும், சிலர் தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்த சம்பவத்தில் 90க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் இவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று உயிர் இழந்தவர்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் வழங்கப்பட்டது. இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க இறுதிச் சடங்கினை செய்து வருகிறார்கள். கருணாபுரத்தில் இருந்து கோமுகி நதிக்கரைக்கு எடுத்து செல்லப்பட்டன. அங்கு 21 பேரின் உடல்கள் தகனமும், 7 பேரின் உடல்கள் அடக்கமும் செய்யப்பட்டது. ஒரே இடத்தில் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.