கள்ளக்குறிச்சி.. பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் ரூ. 5 லட்சம் டெபாசிட்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
Jun 21, 2024,09:06 PM IST

சென்னை:  கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பேசினார்கள். இந்த பிரச்சனையில் இருந்து ஓடி ஒளிபவன் நான் அல்ல; குற்றவாளிகளை கைது செய்த பின்புதான் பதில் அளித்துக்கொண்டிருக்கிறேன். திறந்த மனதோடு சொல்கின்றேன். இரும்புக் கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


மேலும், கள்ளக்குறிச்சி சம்பவத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் வங்கியில் ரூ.5 லட்சம் வைப்புத்தொகை வைக்கப்படும். குழந்தைகள் 18 வயதை அடையும் போது வைப்புத்தொகை வட்டியுடன் சேர்த்து வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரை அவர்களது கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.


இன்று நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில், கள்ளக்குறிச்சு விஷச் சாராய சாவு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:




கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கருத்துக்கூறி, அரசுக்கு ஆலோசனை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி. எதிர்க்கட்சி தலைவரும் வெளிநடப்பு செய்யாமல், அவைக்குள் இருந்து கருத்து தெரிவித்திருக்கலாம். ஆனால் முக்கியமான நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக வெளியே சென்றுவிட்டார். அவருக்கும் சேர்த்தே இந்த அவையில் பதில் அளிக்கின்றேன்!


விஷச்சாராயத்தில் முக்கியமாக மெத்தனால் பயன்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து மெத்தனால் உற்பத்தி அலகுகள், பயனர்கள், மெத்தனால் வைத்திருப்பதற்கான மற்றும் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்ற தொழிற்சாலைகள் போன்றவற்றைத் தணிக்கை செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எதிர்கால சமுதாயத்தை மிக மோசமான வகையில் பாதிக்கும் போதைப் பொருட்களை எந்தவகையிலும் அனுமதிக்க இயலாது என்ற அடிப்படையில், இவற்றை விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியாக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தீவிரமாக எடுத்து வருகின்றோம்.


கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பேசினார்கள். இந்த பிரச்சனையில் இருந்து ஓடி ஒளிபவன் நான் அல்ல; பொறுப்பை உணர்ந்து எடுத்த நடவடிக்கைகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். குற்றவாளிகளை கைது செய்த பின்புதான் பதில் அளித்துக்கொண்டிருக்கிறேன். திறந்த மனதோடு சொல்கின்றேன். இரும்புக் கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறோம்.


கள்ளக்குறிச்சி சம்பவத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் வங்கியில் ரூ.5 லட்சம் வைப்புத்தொகை வைக்கப்படும். குழந்தைகள் 18 வயதை அடையும் போது வைப்புத்தொகை வட்டியுடன் சேர்த்து வழங்கப்பட்டும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரை அவர்களது கல்விச் செலவை அரசே ஏற்கும். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.5,000 வழங்கப்படும். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும். பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்


2001ல் அதிமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாராய நிகழ்வு




முன்னதாக அதிமுகவினர் வெளியேற்றப்பட்ட பின்னர் முதல்வர் எழுந்து சபாநாயகருக்கு கோரிக்கை வைத்துப் பேசினார். அப்போது கூறுகையில், கடந்த டிசம்பர் 2001-ல் இதுபோன்று ஒரு நிகழ்வு கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் நடைபெற்று, 52 நபர்கள் மரணமுற்று, 200-க்கும் மேற்பட்டோர் மிகுந்த பாதிப்புக்குள்ளானார்கள். அப்போது உரிய நடவடிக்கை சரிவர எடுக்கப்படவில்லை என்று எல்லோரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி அவர்களும், நம்முடைய தி.வேல்முருகன் அவர்களும் அவையிலேயே இதுகுறித்து மார்ச் 2002 ஆம் ஆண்டு உரையாற்றியிருக்கிறார்கள்.


தற்போது இந்தச் சம்பவம் குறித்து என்னுடைய கவனத்திற்கு வந்தவுடனேயே நான் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதுகுறித்து நான் அனைத்து உறுப்பினர்களும் பேசிய பின்னர் விரிவாகப் பதில் வழங்குகிறேன்.


அப்போது சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை; தற்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள காரணத்தால், இப்போது பேசுகிற உறுப்பினர்கள் அந்த நிகழ்வு குறித்து பேசுவார்களோ என பயந்துதான் இவர்கள் இன்றைக்குத் திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டு, மரபுகளுக்கு மாறாக குழப்பம் விளைவிக்க முயன்று வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.


ஜனநாயக முறையில் இந்த மாமன்றம் நடைபெறவேண்டும் என்பதில், தலைவர் கலைஞர் அவர்களும், நானும் அசையாத கொள்கை உறுதி கொண்டவர்கள். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திலே பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதில் கொள்கை உறுதி கொண்டவன் இந்த முதலமைச்சர்.


தாங்களும் பல கோரிக்கைகள் வைத்து, பேரவை முன்னவர் அவர்களும் பேசுவதற்கு வாய்ப்பு தரலாம் என பரிந்துரை செய்தும் முதலமைச்சராக, அமைச்சர்களாக இருந்தவர்கள் இங்கே நடந்துகொண்ட முறை தவிர்த்திருக்கப்பட வேண்டியதுதான்.


பேரவை விதி 120-ன்கீழ் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. எனினும் என்னுடைய வேண்டுகோளாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இன்றைக்குக் காலையிலும், மாலையிலும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில், வெளியேற்றப்பட்டவர்கள் இந்த அவைக்கு வினாக்கள் விடைகள் நேரம் முடிந்த பின்னரே அனுமதிக்கப் பெறலாம் என்னும் வேண்டுகோளையும், பிரதான எதிர்க்கட்சி தன்னுடைய கருத்தினைப் பதிவு செய்ய வாய்ப்பு தர வேண்டும் என்றும், இதனை தாங்கள் பரிசீலித்து ஆவன செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


அவரது கோரிக்கையை ஏற்ற சபாநாயயகர் அப்பாவு, அதிமுக உறுப்பினர்கள் சபை நடவடிக்கையில் கலந்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்தார்.