மகளிர் உரிமைத் தொகை.. ஜூலை 20ம் தேதி முதல் டோக்கன் விநியோகம்

Su.tha Arivalagan
Jul 15, 2023,05:21 PM IST
சென்னை: தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் பணி ஜூலை 20ம் தேதி தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது திமுக அளித்த முக்கியமான வாக்குறுதி - இல்லத்தரசிகளுக்கு  மாதம்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை தரும் அறிவிப்பாகும். இது பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதேபோல அளிக்கப்பட்ட இன்னொரு வாக்குறுதி மகளிருக்கு இலவச பஸ் பயண அனுமதி. இந்த வாக்குறுதியை ஏற்கனவே திமுக அரசு நிறைவேற்றி விட்டது. இப்போது உரிமைத் தொகை தரும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.



கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன் பெற முடியும் என்ற விவரத்தை ஏற்கனவே அரசு அறிவித்து விட்டது. அதில் மாற்றம் தேவை என்று பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக அரசுத் ��ரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் பணி ஜூலை 20ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று முதலே விண்ணப்ப பாரமும் விநியோகிக்கப்டபும்.

பயனாளியின் பெயர், திருமணத் தகுதி, தொலைபேசி எண், ஆதார் எண், ரேஷன் கார்டு நம்பர், மின் இணைப்பு எண், சொந்த வீடா, வாடகை வீடா உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அதில் கோரப்பட்டிருக்கும்.

சென்னையைப் பொறுத்தவரை இந்தத் திட்டம் தொடர்பாக பயனாளிகளுக்கு உதவுவதற்காக மாநகராட்சி சார்பில் கிட்டத்தட்ட 3200 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.