கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்
Aug 17, 2023,05:01 PM IST
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காத குடும்ப தலைவிகள் நாளை முதல் மூன்று நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, குடும்ப தலைவிகளுக்கு மாதம் மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்குவோம் என்பது. இந்தத் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு, கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் உரையின்போது அறிவிக்கப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகை யாருக்கு கிடைக்கும் என்ற நெறிமுறைகளை அரசு கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. அதன்படி குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.50 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள், அரசு ஊழியர்கள், ஏற்கனவே முதியோர் தொகை வாங்கும் குடும்பம் ஆகியோர்க்கு மகளிர் உரிமைத் தொகை கிடையாது என்று அறிவிப்பில் வெளியானது.
இதன் அடிப்படையில் தகுதி உடையவர்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் உரிமத் திட்டகாண படிவத்தை பெற்று விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில், தற்போது நாளை முதல் மூன்று நாட்கள் விண்ணப்பிக்க தகுதியான பயனாளிகள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.