மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்வதா.. வங்கிகளுக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

Su.tha Arivalagan
Sep 17, 2023,01:29 PM IST
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளிடமிருந்து வங்கிகள் பிடித்தம் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அப்படி செய்திருந்தால் அந்த வங்கிகளின் பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.





இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் 1.065 கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மகளிர் உரிமை வழங்கும் நிகழ்வை முதல்வர் தொடங்கி வைத்தார். திட்டத் தொடக்கத்தின் முதல் நாளே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது ஒரு மகத்தான நிகழ்வாகும். இதுகுறித்து நாடே பாராட்டுகிறது. தமிழ்நாட்டின் இத்திட்டத்தைப் பற்றி மற்ற மாநிலங்களும் வியந்து பாராட்டி வருகின்றன.

இந்நிலையில் ஆங்காங்கே சில குறைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமைத் தொகையை வங்கிக்கான சேவைக் கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன் ஆகியவற்றுக்கு சில வங்கிகள் நேர் செய்து கொள்வதாக புகார்கள் வரப் பெற்றுள்ளன. இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும். இதுகுறித்து மாநில வங்கிகள் குழுமத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இருப்பினும் சில வங்கிகளில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை  வங்கிகள் தங்களது நிர்வாக செலவினங்களுக்கு நேர் செய்யக் கூடாது என்று மாநிலஅரசுக்கும், வங்கிகளுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தங்களை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.  

தமிழ்நாடு அரசு மகளிரின் நல்வாழ்வுக்காக வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்பது குறித்து மத்திய நிதி அமைச்சருக்கும் கடிதம் எழுதப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

பெண்கள் புகார் தரலாம்

இதற்கிடையே, தங்களது வங்கிக் கணக்கில் அரசு செலுத்திய ரூ. 1000 உரிமைத் தொகையிலிருந்து வங்கிகள் பிடித்தம் செய்திருந்தால் அதுகுறித்து பெண்கள் புகார் தரலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

உரிமைத் தொகை பிடிக்கப்பட்டால் 1100 என்ற எண்ணுக்குப் புகார் தரலாம். புகார் வரப் பெற்ற பிறகு அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.