"கலைஞர் 100".. தலைவர்களுக்கும் அழைப்பு.. அப்ப.. இபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கும் அழைப்பு போயிருக்கா?

Manjula Devi
Jan 05, 2024,04:01 PM IST

சென்னை: கலைஞர் 100 விழா நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாம்.


விழாவை சிறப்பிக்க பன்மொழிப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி  ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.


தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவிற்கு கலைஞர் 100 என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு கலை  நிகழ்ச்சிகள், கலைஞர் எழுதிய வசனம் மற்றும் பாடல்களில் இருந்து ஒரு சிறப்புக்  கண்ணோட்டம், கருணாநிதி பற்றி இதுவரை அறியாத தகவல்கள் நிறைந்த ஆவணப் படங்கள் ஆகியவை மக்களுக்கு காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




இவ்விழா பிரம்மாண்டமான முறையில், மக்களை மகிழ்விக்க கூடிய சிறப்புக் நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ளது. விழாவில் 50க்கும் மேற்பட்ட திரைப்பட இயக்குனர்கள், 20க்கும் மேற்பட்ட டான்ஸ் மாஸ்டர்கள் என ரிகர்சல் செய்து வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் கலைஞர் 100  விழாவில் 50க்கும் மேற்பட்ட டிஜிட்டல் திரைகள் கொண்ட 20 ஆயிரம் பேர் உட்கார்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.




ஏற்கனவே தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனு்கு விழாவில் பங்கேற்க நேரில் போய் அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ,மலையாளம், ஹிந்தி உட்பட முன்னணி திரை பிரபலங்களும் அழைப்பு விடுக்கப்பட்டு இதில் கலந்து கொள்ள தயாராக உள்ளனர்.


நாளை சனிக்கிழமை சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் விழா நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க, மறுமலர்ச்சி தி.மு.க,  மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது.




இவர்கள் மட்டுமின்றி முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் வர வாய்ப்புள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வாரா?