மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
சென்னை: சாமியார் நித்தியானந்தா இறந்து விட்டதாக வந்த செய்திகளை அவரது தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. நித்தியானந்தா உயிருடன் இருக்கிறார், பாதுகாப்பாக இருக்கிறார், ஆக்டிவாக இருக்கிறார் என்று அவர் உருவாக்கிய கைலாசா என்ற நாட்டின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர நித்தியானந்தாவும் சில வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பைக் கலகலப்பாக்கியுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வரும் நித்தியானந்தா இங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவர் தற்போது ஈக்வடார் நாட்டு பகுதியில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கைலாசா என்ற நாட்டை தான் உருவாக்கியிருப்பதாகவும் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நித்தியானந்தா உயிர்த்தியாகம் செய்து விட்டதாக அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் என்பவர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோல ஏற்கனவே சில முறை நித்தியானந்தா குறித்துத் தகவல்கள் பரவியதுண்டு. அதுபோல இதுவும் இருக்கலாமோ என்று எண்ணப்பட்டது. இருப்பினும் நித்தியானந்தாவின் சகோதரி மகனே இப்படிக் கூறியதால் பரபரப்பும் நிலவி வந்தது.
இந்த நிலையில் இந்த செய்தியை நித்தியானந்தாவின் கைலாசா மறுத்துள்ளது. இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், நித்தியானந்தா குறித்து வெளியான அவதூறான செய்திகளை கடுமையாக கண்டிக்கிறோம். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இது அவரது நற்பெயரைக் கெடுக்கும் விஷமப் பிரச்சாரமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர நித்தியானந்தா பேசிய சில வீடியோக்களையும் கைலாசா எக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வீடியோவில் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அதில் பேசியுள்ள நித்தியானந்தா, நான் 126 வயது வரைக்கும் இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். வீணாப் போன நாயிங்க பேசிப் பேசியே இதை அதிகரிச்சிடானுங்க.. மகனுங்களா வேணாம் வம்பு பண்ணாதீங்க.. இப்படியே பேசிக் கொண்டிருந்தால் இதை நான் 1000 வருடங்களாக மாத்திருவேன் என்று சிரித்தபடி கூறுகிறார் நித்தியானந்தா. இந்த வீடியோவில் நித்தியானந்தா தாடி மீசை இல்லாமல் மொழு மொழுவென்று இருக்கிறார்.
அதேபோல இன்னொரு வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் தாடி மீசையுடன் இருக்கிறார். அந்த வீடியோவில் நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா.. நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க என்று சிரித்தபடி கூறியுள்ளார் நித்தியானந்தா.
ஒரு வீடியோவில் பாகுபலி மியூசிக் பின்னணியில் ஒலிக்கிறது. இன்னொரு வீடியோவில் டப்பாங்குத்து இசை வருகிறது.. இந்த வீடியோக்களி்ல் எது லேட்டஸ்ட், எது பழசு என்று தெரியவில்லை.!