"காக்காமுட்டை" மணிகன்டன் வீட்டில் திருட்டு.. தேசிய விருதுகளையும் திருடிச் சென்ற கயவர்கள்!
மதுரை: இயக்குநர் மணிகண்டனின் உசிலம்பட்டி வீட்டில் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. அவரது வீட்டில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பல பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். அதில் தேசிய விருதுக்கான பதக்கங்களையும் திருடிச் சென்று விட்டனர்.
2 தேசிய விருது பதக்கங்கள், ரூ. 1 லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்படடுள்ளதாக முதல் கட்டத் தகவலில் தெரிய வந்துள்ளது. தறபோது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும் மணிகண்டன், திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து மதுரைக்குப் புறப்பட்டுப் போயுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன். காக்கா முட்டை படம் இவரது முதல் படமாகும். முதல் படத்திலேயே தேசிய விருதை இப்படம் அள்ளியது. அடுத்து குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களையும் இவர் இயக்கியுள்ளார். இதில் கடைசி விவசாயி படமும் தேசிய விருதுகளைப் பெற்றது. விஜய் சேதுபதியை வைத்து விண்ட் என்ற குறும்படத்தையும் இவர் இயக்கியுள்ளார். இவரது வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள எழில் நகரில் உள்ளது.,
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக திரைப்பட வேலைக்காக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் சூழலில் அவரது வீட்டில் உள்ள நாய்க்கு மணிகண்டனின் ஓட்டுநர்களான ஜெயக்குமார், நரேஷ்குமார் என்ற இருவரும் தினசரி வந்து உணவு வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தாக கூறப்படுகிறது.,
இந்நிலையில் நேற்று காலையில் நாய்க்கு உணவை வைத்துவிட்டு சென்ற பின் வழக்கம் போல மாலை 4 மணியளவில் நாய்க்கு உணவு வைக்க வந்த நரேஷ்குமார், வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் நடத்திய சோதனையில் வீட்டின் பிரோவில் இருந்த "கடைசி விவசாயி" திரைப்படத்திற்காக மத்திய அரசு வழங்கிய இரு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது.
இயக்குனர் மணிகண்டன் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னரே மேலும் பணம், நகை ஏதும் கொள்ள போனதா என தெரிய வரும் என கூறப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, டிஎஸ்பி நல்லு தலைமையில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.