எத்தனை காலம்தான் புஷ்பாவை ஆதரிப்பீர்கள்.. தமிழ் சினிமாவை ஆதரியுங்கள்.. கே.ராஜன் விளாசல்!

Su.tha Arivalagan
Dec 10, 2024,12:01 PM IST

சென்னை: எத்தனை காலம்தான் புஷ்பா மாதிரி படங்கள் உங்களைக் காப்பாற்றும். முதலில் தமிழ்ப் படத்திற்கு ஆதரவு கொடுங்கள் எப்போதும் தமிழுக்கு முதலிடம் கொடுங்கள் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார்.


எக்ஸ்டிரீம் பட இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:




இந்தப்படம் டிரெய்லர் பார்த்தேன், மனம் விட்டு வாழ்த்த வைத்துவிட்டது. மியூசிக், கேமரா, நடிப்பு எல்லாம் அருமையாக உள்ளது.  இயக்குநர் எல்லோரையும் வேலை வாங்கியுள்ளார். 


இவரின் தூவல் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்றனர். அது தமிழ்நாட்டின் சாபம், ஏதோ மொழி புஷ்பா படத்திற்கு 500 திரையரங்குகள் தந்துள்ளார்கள். முதலில் தமிழ்ப்படத்திற்குத் திரையரங்குகள் தாருங்கள், எத்தனை காலம் புஷ்பா மாதிரி படங்கள் உங்களைக் காப்பாற்றும்? அதனால் எப்போதும் தமிழுக்கு முக்கியத்துவம் தாருங்கள். தமிழ் நடிகர்களை நடிக்க வையுங்கள். அதன் பிறகு மற்ற மொழிகளுக்கு வாய்ப்பு கொடுங்கள். 


இப்போதெல்லாம் நல்ல கதையுள்ள  சின்ன படங்கள் தான் ஜெயிக்கிறது. லப்பர் பந்து படம் பெரிய படங்களைத் தாண்டி ஜெயித்தது. அதை மக்கள் தான் ஜெயிக்க வைத்தார்கள்.  அது போல் இந்தப்படத்திலும் எல்லா மனமும் மிக நன்றாக உள்ளது. படம் கண்டிப்பாக ஜெயிக்கும் வாழ்த்துக்கள். 


கடந்த வாரம் ஒரு பெரிய படத்தைப் பத்திரிக்கையாளர்கள் தோற்கடித்துவிட்டதாகச் சொன்னார்கள். படம் நன்றாக இருந்தால் யாராலும் அதன் வெற்றியைக் குறைக்க முடியாது. நல்ல படம் எடுங்கள் பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தருவார்கள் என்றேன். அதே போல் நல்ல படமெடுத்த இந்தக்குழு ஜெயிப்பார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார் அவர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்