ஓய்வு பெறுகிறார் நீதிபதி டிஒய் சந்திரசூட்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்

Su.tha Arivalagan
Oct 25, 2024,09:43 AM IST

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் நவம்பர் மாதம் 10ம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


6 மாத காலம் மட்டுமே சஞ்சீவ் கண்ணா தலைமை நீதிபதி பதவியில் இருப்பார். அவரது பதவிக்காலம் அடுத்தாண்டு மே 13ம் தேதியுடன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா.


தலைமை நீதிபதியாக நவம்பர் 11ம் தேதி நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்காவுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.




உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியாக பல முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு கூறியவர் நீதிபதி சஞ்சீவ் கண்ணா. இதுவரை 456 அமர்வுகளில் கலந்து கொண்டு 117 தீர்ப்புகளை நீதிபதி சஞ்சீவ் கண்ணா வழங்கியுள்ளார். டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய வழக்கு, விவிபேட் தொடர்பான வழக்கு, தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு ஆகியவற்றில் தீர்ப்பு வழங்கிய பெஞ்ச்சில் நீதிபதி சஞ்சீவ் கண்ணாவும் ஒருவராக இடம் பெற்றிருந்தார்.


அதேபோல ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும்  மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்த வழக்கிலும் தீர்ப்பு கூறிய பெஞ்ச்சில் இடம் பெற்றவர் நீதிபதி சஞ்சீவ் கண்ணா.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்