ம.பி. முதல்வர் யார்.. நாளை தெரியும்.. ராஜஸ்தான், சத்திஸ்கரில் தொடரும் சஸ்பென்ஸ்!
டெல்லி: மத்தியப் பிரதேச முதல்வரை நாளை பாஜக எம்.எல்ஏக்கள் கூடி தேர்ந்தெடுக்கவுள்ளனர். அதேசமயம், ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் முதல்வர் யார் என்பதில் தொடர்ந்து சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.
சமீபத்தில் ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மிஸோரம் மாநிலத்தில், காங்கிரஸ், பாஜக இரண்டுமே படுதோல்வியைச் சந்தித்தன.
இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் புதிய அரசு அமைந்து விட்டது. மிஸோரமிலும் அமைந்து விட்டது. ஆனால் பாஜக வென்ற 3 மாநிலங்களிலும் இதுவரை முதல்வர் யாரும் பதவியேற்காமல் உள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரமாகப் போகும் நிலையில் இன்னும் பாஜக அரசு பதவியேற்காமல் இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வர் பதவியை வகிக்க ஆர்வம் காட்டுகிறார். அவருக்கு மக்கள் செல்வாக்கும் இருக்கிறது. இதன் காரணமாகவே அவரால் அங்கு பாஜக தொடர் வெற்றியை ஈட்ட முடிகிறது என்பது சவுகான் ஆதரவாளர்களின் கருத்தாகும். இருப்பினும் அடுத்த தலைமுறையிடம் கட்சி மற்றும் ஆட்சியை ஒப்படைக்க பாஜக மேலிடம் கருதுகிறது. இதனால் அங்கு தொடர் குழப்பம் நிலவி வருகிறது. நாளை அங்கு யார் முதல்வர் என்பதை இறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தானைப் பொறுத்தவரை முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் பலக்நாத் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருமே தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளனர். இதனால் அங்கும் இழுபறி நிலவுகிறது. பலக்நாத் ஒரு துறவி ஆவார். உ.பியில் யோகி ஆதித்யநாத் முதல்வரானது போல ராஜஸ்தானில் பலக்நாத் முதல்வராக விரும்புகிறார். அந்த நோக்கில் காய் நகர்த்தியும் வருகிறார். ராஜஸ்தானில் பிரபலமான யோகியும் கூட. திஜாரா தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பலக்நாத். இவர்களுக்கு இடையே இங்கு போட்டி நிலவுவதால் குழப்பமும் நீடிக்கிறது.
சத்திஸ்கரைப் பொறுத்தவரை அங்கும் 3 பேருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் முதல்வர் ரமன் சிங் மீண்டும் முதல்வராகத் துடிக்கிறார். 3 முறை முதல்வராக இருந்தவர் ரமன் சிங். அவருக்குக் கடும் போட்டியைக் கொடுத்து வருகிறார் ரேணுகா சிங். இவர் மத்திய அமைச்சராக இருந்தவர். சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தற்போது எம்எல்ஏ ஆகியுள்ளார். இவரும் முதல்வர் பதவியைக் கேட்டு வருகிறார். இன்னொரு முன்னாள் அமைச்சர் விஷ்ணு தியோவும் முதல்வர் பதவிக்காக காத்திருக்கிறார். இவர்கள்தான் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் சிலரும் போட்டியில் உள்ளதால் சத்திஸ்கரில் பெரும் இழுபறி நிலவுகிறது. இங்கு அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க அர்ஜூன் முண்டா தலைமையிலான உயர் மட்டக் குழு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இன்றைக்குள் ராஜஸ்தான், சத்திஸ்கர் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தெளிவாகி விடும் என்று பாஜக மேலிடம் நம்பிக்கையில் உள்ளது. ம.பியில் நாளை இழுபறி முடிவுக்கு வரக் கூடும்.