மெஜாரிட்டி பலத்துடன் நிலையான அரசை மத்தியில் அமைந்துள்ளது.. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

Manjula Devi
Jun 27, 2024,05:43 PM IST
டெல்லி: மத்தியில் மெஜாரிட்டி பலத்துடன் நிலையான அரசு அமைக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பதினெட்டாவது லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார்.  கடந்த 2 நாட்களாக  புதிய எம்.பிக்கள் பதவியேற்பு நடந்தது. நேற்று சபாநாயகர் தேர்தல் நடந்தது. மீண்டும் ஓம் பிர்லாவே சபாநாயகராகியுள்ளார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் நடந்தது.  அப்போது குடியரசுத் தலைவர் பேசுகையில், 



நாட்டு மக்கள் சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உலகிலேயே மிகப் பெரிய தேர்தல் இது. பல வருட கால வாக்குப் பதிவு சாதனைகள் ஜம்மு காஷ்மீரில் முறியடிக்கப்பட்டுள்ளன.  கடந்த 40 வருடமாக காஷ்மீரில் மிகவும் குறைவான வாக்குப் பதிவே நடந்து வந்தது. வேலை நிறுத்தங்கள் கடையடைப்புகள்தான் அதிகம் நடந்தன. இந்தியாவின் எதிரிகள், காஷ்மீர் குறித்து சர்வதேச தலங்களில் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர். ஆனால் இந்த முறை அனைவருக்கும் சரியான பதிலடியை காஷ்மீர் மக்கள் கொடுத்து விட்டனர்.

மத்தியில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பான்மை பலத்துடன், நிலையான ஆட்சி அமைந்துள்ளது. அரசு மீது மக்கள் 3வது முறையாக நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த அரசால் மட்டுமே தங்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். 18வது லோக்சபா பல்வேறு வகைகளில் வரலாறு படைத்துள்ளது.

அம்ரித் கால் காலத்தின் தொடக்க காலத்தில் இந்த லோக்சபா அமைக்கப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டதன் 56வது வருடத்தைக் காணவுள்ளது. வரவிருக்கிற தொடரில் தனது முதல் பட்ஜெட்டை இந்த அரசு சமர்ப்பிக்கவுள்ளது.தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்களையும், கொள்கைகளையும் இந்த பட்ஜெட் விளக்கவுள்ளது. மாபெரும் சமூக பொருளாதார மாற்றங்களை இந்த அரசு மேற்கொள்ளவுள்ளது.  பல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.

பிரதம மந்திரி கிசான் சன்மான் நிதி மூலமாக விவசாயிகளுக்கு ரூ. 3.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய அரசு அமைந்தது முதல் இதுவரை விவசாயிகளுக்கு ரூ. 20,000 கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவை சர்வதேச அளவில் மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றியிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 11வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. கொரோனா பேரிடர் சவாலையும், பல்வேறு சவால்களையும் சந்தித்து இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்கள், துணிச்சலான நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என்று கூறினார் குடியரசுத் தலைவர்.

குடியரசுத் தலைவர் உரையின்போது வட கிழக்கு மாநிலங்கள் குறித்துப் பேசியபோது, எதிர்க்கட்சிகள் மணிப்பூர் மணிப்பூர் என்று கோஷமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களுக்குப் பதில் தரும் வகையில் பாஜக உறுப்பினர்கள் மேசைகளை பலமாக தட்டி ஒலி எழுப்பினர்.

முன்னதாக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து குதிரை படையின் மெய் காவலர்கள், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்து சென்றார். நாடாளுமன்ற வளாகத்தில் அவரை, பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீஷ் தங்கர், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் வரவேற்று நாடாளுமன்றத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்து ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.