"குதிரை பேர அபாயம்".. ஹைதராபாத்துக்குப் பறக்கத் திட்டமிட்ட.. ஜேஎம்எம் கூட்டணி எம்எல்ஏக்கள்.. ஆனால்!

Su.tha Arivalagan
Feb 01, 2024,10:09 PM IST

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடுத்து ஆட்சியமைக்க சாம்பாய் சோரனை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்னும் அழைக்காமல் இருப்பதால் குதிரை பேரம் நடப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியிருப்பதாக  காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி எம்எல்ஏக்கள் ஹைதராபாத்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால் வானிலை மோசமாக இருந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.


ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா  செய்து விட்டார். அவரது கட்சி சார்பில் சாம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சட்டசபைக் கட்சித் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரும் ஆளுநரிடம், தனக்கு 47 உறுப்பினர்களின் இருப்பதாகவும் ஆளுநரிடம் பட்டியலைக் கொடுத்துள்ளார் சாம்பாய் சோரன். இன்று மாலையும் கூட ஆளுநரை சந்தித்து மீண்டும் தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.


அழைக்காத ஆளுநரால் பரபரப்பு


இருப்பினும் ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. இந்த நிலையில் ஜார்க்கண்ட்டில் பின்வாசல் வழியாக ஆட்சியமைக்க பாஜக முயல்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, குதிரை பேரம் நடத்தி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிகளை உடைக்கவும் பாஜக முயல்வதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.




இதையடுத்து தற்போது அதிரடியாக தங்களது கூட்டணியைச் சேர்ந்த 47 எம்எல்ஏக்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கட்சிகள் எடுத்துள்ளன. சில எம்எல்ஏக்களை மட்டும் ராஞ்சியில் தங்க வைத்து விட்டு, 43 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் தெலங்கானாவுக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி எம்எல்ஏக்களும் விமான நிலையம் வந்தனர். ஆனால் வானிலை மோசமாக இருந்ததால் அவர்களால் திட்டமிட்டபடி போக முடியவில்லை. இதனால் அனைவரும் மீண்டும் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர். முன்னதாக ஜேஎம்எம் கூட்டணி எம்எல்ஏக்களை ஹைதராபாத் அருகே ரிசார்ட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல  மாநிலங்களில் இந்த ரிசார்ட் அரசியல் மிகப் பிரபலமானது. கூவத்தூர் மாடல் பாலிட்டிக்ஸை நாடு மறந்திருக்காது. இந்த நிலையில் தற்போது ஜார்க்கண்ட்டிலும் அந்த ரிசார்ட் பாலிட்டிக்ஸ் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


யார் யாருக்கு.. எத்தனை எம்எல்ஏக்கள்?


ஜார்க்கண்ட் சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 81 ஆகும். இதில் பெரும்பான்மை பலம் என்பது 41 உறுப்பினர்கள். பாஜகவுக்கு 25 உறுப்பினர்கள் உள்ளனர். அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் கட்சிக்கு 3 பேர் உள்ளனர். தேசியவாத காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுக்குதலா ஒன்றும், 3 சுயேச்சைகளும் உள்ளனர்.


ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் இணைந்து இங்கு கூட்டணி அமைத்துள்ளன. இவர்களுக்கு மொத்தம் 47 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 29 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள்தான் இங்கு தனிப் பெரும் கட்சியாகும். காங்கிரஸுக்கு 17 பேரும், ஆர்ஜேடி கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர்.


எம்எல்ஏக்களைக் காக்க ஜேஎம்எம் மும்முரம்:


இந்த கூட்டணி உடைந்து விடக் கூடாது என்பதில் காங்கிரஸ் மிகக் கவனமாக உள்ளது. ஒருவர் வெளியேறினாலும் கூட பாஜகவுக்கு அது நல்ல வாய்ப்பாக அமைந்து விடும் என்பதால் எம்எல்ஏக்களைப் பாதுகாக்க முயல்கிறது காங்கிரஸ். 


பாஜகவைப் பொறுத்தவரை அவர்களது 15 எம்எல்ஏக்கள் போக அனைத்து ஜார்க்கண்ட் கட்சியின் 3 எம்எல்ஏக்கள், சுயேச்சைகள் 3 பேரை அது வளைத்து வைத்திருக்கிறது. இன்னும் 9 பேர் இருந்தால் ஆட்சியமைக்க முடியும். இவர்களை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் ஓட்டையைப் போட்டு ஆட்டையைப் போட அது முயல்கிறது என்பதுதான் காங்கிரஸின் தற்போதைய குற்றச்சாட்டு.