அடுக்கு மாடிக் குடியிருப்பில் தீவிபத்து.. தாய் உள்பட 5 பேர் பலி.. மகளுக்கு நடந்த கல்யாணம்!

Su.tha Arivalagan
Feb 02, 2023,10:53 AM IST
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் தாய் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். ஆனால் இந்த விஷயத்தை மகளுக்குத் தெரியாமல் மறைத்த தந்தை, அவரது திருமணம் முடிந்த பிறகே நடந்ததைக் கூறி கதறி அழுதார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் உள்ள ஜோராபதக் என்ற பகுதியில் வசித்து வருபவர் சுபோத் லால். இவரது மகள் ஸ்வாதி. இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.  இவர்களது வீடு ஜோராபதக் பகுதியில் உள்ள ஆசிர்வாத் டவர் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் 4வது தளத்தில் உள்ளது. 

நேற்று ஸ்வாதியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மணமகன் உள்ளிட்ட சிலர் திருமண மண்டபத்திற்குப் போய் விட்டனர். மணமகளின் தாயார், தாத்தா, பாட்டி உள்ளிட்ட சிலர் வீட்டிலிருந்து கிளம்பிக் கொண்டனர். மணப்பெண்ணின் தந்தை வீட்டை விட்டு வெளியே வந்து இவர்களுக்காக காத்திருந்தார். அப்போதுதான் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இந்த கொடூர தீவிபத்தில் சிக்கி 14 பேர் பலியானார்கள்.

இதில் சுபோத் லாலின் மனைவி,  பெற்றோர் மற்றும் 2 உறவினர்களும் இறந்து போய் விட்டனர்.கண் முன்பாகவே தனது மனைவி, பெற்றோர்,உறவினர்கள் இறந்ததைப் பார்த்து துடித்துப் போய் விட்டார் சுபோத் லால். மறுபக்கம் கல்யாணத்துக்காக மண்டபத்தில் மகள் காத்திருந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போன சுபோத் லால், மகளது திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று மனதை கல்லாகிக் கொண்டு மண்டபம் விரைந்தார்.

அவரிடம் அம்மா எங்கே, தாத்தா பாட்டி எங்கே என்று கேட்டுள்ளார் ஸ்வாதி. வருகிறார்கள் என்று கூறிய அவர், திருமணத்தை உடனடியாக நடத்துமாறு அனைவரிடமும் கேட்டுக் கொண்டார். அனைவரும் நிலையை உணர்ந்து கொண்டு சோகத்தை மறைத்துக் கொண்டு திருமண சடங்குகள விரைவுபடுத்தினர். ஸ்வாதி மட்டும் தனது அப்பாவிடம், அம்மா எங்கேப்பா என்று கேட்டுக் கொண்டே இருந்தார். மகளை சமாதானப்படுத்தி திசை திருப்பினார் சுபோத் லால். ஒரு வழியாக திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

எல்லாம் முடிந்த பிறகுதான் நடந்த துயரத்தைக் கூறி கதறி  அழுதார் சுபோத் லால். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த  ஸ்வாதி, தந்தையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறினார்.  இந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.