அயோத்தி ராமரின்.. தலை முதல் கால் வரை.. இழையோடும் நகைகள்.. எவ்வளவு இருக்கு பாருங்க!

Su.tha Arivalagan
Jan 23, 2024,05:40 PM IST

அயோத்தி: அயோத்தியில் புதிய கோவில் கண்டுள்ள பால ராமரின் சிலையில் இடம் பெற்றுள்ள நகைககள்தான் இப்போது மக்களின் பேசு பொருளாகியுள்ளது.


ஒவ்வொரு கடவுளும் அணிந்திருக்கும் உடையும், நகையும்தான் மக்களைக் கவரும். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் என்ன உடை அணிந்து இருந்தார் என்பதைத்தான் மக்கள் கவனிப்பார்கள். அதேபோல மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனால், மீனாட்சி அம்மனின் வைரமூக்குத்திதான் டாலடிக்கும், மக்களும் அதைத்தான் ரசிப்பார்கள்.




இப்படி ஒவ்வொரு கடவுளிடமும் மக்கள் ஆடை ஆபரணங்களைப் பார்த்து மகிழ்வார்கள். அந்த வகையில் அயோத்தியில் புதிதாக கோவில் கண்டு குடியேறியுள்ள ராமர் சிலையிலும் ஏகப்பட்ட நகைகள் அலங்கரிக்கின்றன. இதுகுறித்துத்தான் இப்போது ராம பக்தர்கள் சிலாகித்துக் கொண்டுள்ளனர்.


ராமர் சிலையில் இடம் பெற்றுள்ள நகைகள் அனைத்தையும் ஹராசிமால் சியாம்லால் ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையினர்தான் செய்து கொடுத்துள்ளனர்.  லக்னோவைச் சேர்ந்த நகைக் கடை இது. சர்வதேச ஜெம்மாலஜிகல் கழகத்தின் சான்றிதழ் இந்த நகைகளுக்குக் கிடைத்துள்ளது.  வைரம், ரூபி, எமரால்டு, தங்கம் என்று பல்வேறு வகையான ஆபரணங்கள் ராமரை அலங்கரித்துக் கொண்டுள்ளன. இந்த நகைகள் குறித்துப்  பார்ப்போம்.


1.7 கிலோ தலை கிரீடம்




ராமரின் தலையில் அழகான கிரீடம் சூட்டப்பட்டுள்ளது. இது தங்கத்தால் ஆன கிரீடம் ஆகும். இதன் எடை 1.7 கிலோ ஆகும். 22 காரட்  தங்கத்தால் ஆன "ஹாலோ" வளையம், ராமரின் தலைக்குப் பின்னால் அமைந்துள்ளது. இது அரை கிலோ எடை கொண்டதாகவும். இந்த கிரீடத்தில், 75 காரட் வைரங்கள், 135 காரட் ஜாம்பியா எமரால்டுகள், 262 காரட் ரூபி ஆகியவை இடம் பெற்றுள்ளன.


ராமரின் நெற்றியை அலங்கரிக்கும் திலகம் அல்லது நெற்றிச் சுட்டியானது, தூய தங்கத்தால் ஆனது. இது 16 கிராம் எடை கொண்டது. அதன் நடுவே 3 காரட் இயற்கை வைரக் கல் பதிக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றிலும் 10 காரட் சிறு வைரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கண் புருவங்களுக்கு மத்தியில் உள்ள பகுதியில் இயற்கையான பர்மா நாட்டு ரூபிகள் பதிக்கப்பட்டுள்ளன.


கை விரலில் எமரால்டு மோதிரங்கள்




ராமரின் கை விரலில் எமரால்டு மோதிரம் பொருத்தப்பட்டுள்ளது.  இது 65 கிராம் எடை கொண்டது. அதில், 4 காரட் வைரம், 33 காரட் எமரால்டு ஆகியவையும் அடங்கியுள்ளது. இடது கையில் ரூபி மோதிரம் பொருத்தப்பட்டுள்ளது. அது 26 கிராம் எடை கொண்டது. இதில் வைரமும், ரூபியும் இடம் பெற்றிருக்கிறது.


ராமர் சிலையின் கழுத்தில் சிறிய நெக்லஸ் இடம் பெற்றுள்ளது. இது தங்கத்தால் ஆனது, 500 கிராம் எடை கொண்டது. அதில் 50 காரட் வைரங்கள், 150 காரட் ரூபிகள், 380 காரட் எமரால்டு கற்கள் இடம் பெற்றுள்ளன.  இதுதவிர 5 வரிசை கொண்ட பெரிய ஆரமும் கழுத்தில் இடம் பெற்றுளது. அது 660 கிராம் எடை கொண்டது. அதில் 80 காரட் வைரம், 60 காரட் போல்கி, 550 காரட் எமரால்டு ஆகிய கற்கள் இடம் பெற்றுள்ளன. 

விஜயமாலா என்ற நகையும் ராமர் சிலையை அலங்கரிக்கிறது. இது 2 கிலோ எடை கொண்டது. 


இடுப்பு ஆபரணம்




ராமரின் இடுப்பில் ஒட்டியானம் போன்ற "கமர்பந்த்" என்ற ஆபரணம் இடம் பெற்றுள்ளது. தங்கத்தால் ஆன இந்த ஆபரணம் 0.75 கிலோ எடை கொண்டது. அதில் 70 காரட் வைரம், 850 காரட் ரூபி, எமரால்டு கற்கள் இடம் பெற்றுள்ளன. 


தோள்பட்டையில் அணியும் பேன்ட் மற்றும் கைக் காப்பு ஆகியவையும் கிராண்டாக செய்ய்பட்டுள்ளன. இரு தோள்பட்டைகளிலும்  400 கிராம் தங்கத்திலான பட்டைகள் அணிவிக்கப்பட்டுள்ளன. இது 22 காரட் தங்கத்தில் செய்யப்பட்டது. அதேபோல கைக்காப்பு 850 கிராம் எடை கொண்டது. அதில் 100 காரட் வைரமும், 320 காரட் ரூபி, எமரால்டு கற்களும் பதிக்கப்பட்டுள்ளன.


ராமரின் காலில் 400 கிராம் எடையுள்ள பாக் குடா என்ற அணிகலன் இடம் பெற்றுள்ளது. இது வைரம் மற்றும் ரூபி கற்களால் ஆனது.  பாயல் எனப்படும் இன்னொரு கால் அணிகலன், 22 காரட் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இது அரை கிலோ எடையுடன் கூடியதாகும்.