கிராமங்களுக்கு குடியேறுங்க.. கல்யாணம் பண்ணுங்க.. செலவை நாங்க ஏத்துக்கறோம்.. சூப்பர் ஆஃபர்!

Manjula Devi
Aug 29, 2024,05:22 PM IST

டோக்கியோ: கிராமப்புறங்களில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் கிராமங்களில் குடியேறும் இளம் பெண்களின் போக்குவரத்து மற்றும் திருமண செலவுகளை ஜப்பான அரசே ஏற்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


கல்வி மற்றும் வேலை நிமிர்த்தம் காரணமாக மக்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு அதிகமாக குடியேறி வருகின்றனர்.  இது எல்லா நாடுகளிலும் நடைபெறும் ஒன்றுதான். அதிக வசதிகள் உள்ள ஊர்களுக்குப் போவதையே பலரும் விரும்புகிறார்கள். இதனால் கிராமங்கள் கைவிடப்படுகின்றன, புறக்கணிக்கப்படுகின்றன. இதுவும் எல்லா நாடுகளிலும் நடைபெறும் ஒரு நிகழ்வுதான். 




ஜப்பானில் இது வேறு மாதிரியான பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாம். குறிப்பாக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு செல்லும் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் படையெடுத்து வருகின்றனர். இப்படி கல்வி மற்றும் வேலை காரணமாக இடம்பெயரும் பெண்கள் மீண்டும் கிராமப்புற பகுதிகளுக்கு திரும்புவதில்லை. இதனால் கிராமங்களில் வசிக்கும் இளம் பெண்களின் சராசரி விகிதம் குறைந்து வருகிறதாம்.


இதையடுத்து கிராமப்புற மக்கள் தொகையை அதிகரிக்க, ஜப்பான் அரசு சார்பில் டேட்டிங் செயலி, குழந்தை பெறுவோருக்கு நிதியுதவி போன்ற திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் கிராமங்களில் இளம் பெண்களின் விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் நகரங்களை நோக்கிய மக்கள் படையெடுப்பை மீண்டும் கிராமத்து பக்கம் திருப்ப ஜப்பான் அரசு ஒரு புதுமையான திட்டத்தை கையில் எடுத்துள்ளது. 


டோக்கியோவை சுற்றியுள்ள 23 கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று அங்கு வாழ ஆரம்பிக்கும் இளம் பெண்களுக்கு அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி இந்த கிராமங்களுக்கு சென்று வசித்து அங்கேயே திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு 7 ஆயிரம் டாலர் நிதி உதவி அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது தவிர கிராமங்களுக்கு குடியேறும் இளம்பெண்களின் போக்குவரத்து செலவையும் அரசே ஏற்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. 


ஜப்பான் நாட்டின் இந்த திட்டம் மிகப் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படி ஒரு ஆஃபர் நம் நாட்டிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என பலரும் பாராட்டி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்