"காந்தி படிக்காதவர்.. சட்டம் படித்தவர் என்பது தவறு".. சொல்கிறார் ஜம்மு காஷ்மீர் கவர்னர்!

Su.tha Arivalagan
Mar 25, 2023,02:13 PM IST
ஸ்ரீநகர்: மகாத்மா காந்தி சட்டம் படித்தவர் என்பது தவறான கருத்தாகும். அவரிடம் எந்த பல்கலைக்கழகத்தின் பட்டமும் இல்லை என்று கூறியுள்ளார் ஜம்மு காஷ்மீர் மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா.

மேலும், மகாத்மா காந்தியின் ஒரே கல்வித் தகுதி அவர் உயர் நிலைப் பள்ளிப் படிப்பில் தேறியவர் என்பது மட்டுமே என்றும் கூறியுள்ளார் மனோஜ் சின்ஹா. இது தேசிய அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.



குவாலியரில் டாக்டர் ராம் மனோகர் லோகியா நினைவு உரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போதுதான் இப்படித் தெரிவித்தார் மனோஜ் சின்ஹா. ஆனால் இதற்கு எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை.

மனோஜ் சின்ஹா பேசுகையில், சிலருக்குத்தான் இந்த உண்மை தெரியும். பெரும்பாலானோருக்கு, குறிப்பாக படித்தவர்களுக்கே கூட காந்தி சட்டப்படிப்பு படித்தார் என்ற தவறான தகவல்தான் தெரியும். உண்மையில் காந்தி எந்த பட்டப் படிப்பும் படிக்கவில்லை.  இதை பலர் சர்ச்சையாக பார்க்கலாம். ஆனால் உண்மை இதுதான். நான் உண்மையின் அடிப்படையில்தான் பேசுகிறேன்.

காந்தி உயர் நிலைப் பள்ளி வரை மட்டுமே படித்தவர். அதுதான் அழரது தகுதி. காந்திஜி படிக்காதவர் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் கிடையாது. ஆனால் அவரிடம் ஒரு சாதாரண பட்டம் கூட இல்லை. எந்தப் பட்டமும் பெறாதவர் அவர். எந்தப் பல்கலைக்கழகத்திலும் படிக்காதவர் அவர். 

உண்மையின் சக்தியால், சுதந்திரத்தை அடைந்தவர் காந்திஜி. அதனால்தான் அவர் தேசத்தின் தந்தையாகவும் மாறினார்.  சட்டம் படிக்காமலேயே அவர் சட்ட நிபுணராக இருந்துள்ளார்.  அந்த அளவுக்கு அறிவாளியாக திகழ்ந்தவர் அவர். அவரது திறமை காரணமாக சட்டம் படிக்காமலேயே அவர் வழக்கறிஞராக பணியாற்றும் தகுதியைப் பெற்றார் என்றார் சின்ஹா.