ஜம்மு காஷ்மீர்.. சட்டசபைத் தேர்தல்.. நாளை முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு

Manjula Devi
Sep 17, 2024,03:37 PM IST

ஸ்ரீநகர்:   ஜம்மு காஷ்மீரில் உள்ள 24 தொகுதிகளில் நாளை முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சார பணிகள் இன்று மாலையுடன் ஓய்கிறது.


அரசியலமைப்பு சாசனத்தின் படி 370 ஆவது பிரிவின் கீழ் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. முன்னதாக, இங்கு 2014 ஆம் ஆண்டு இறுதியாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அப்போதிலிருந்து இப்போது வரை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. 




பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் ஜம்மு காஷ்மீரில் எப்போது தேர்தல் நடைபெறும் என மக்கள் ஆர்வமாக இருந்து வந்தனர். இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் நெருக்கடியால் தற்போது ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியானது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு பின்,10  வருடங்களுக்குப் பிறகு வரும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவே. 


நாளை (செப் 18) முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும். இதையடுத்து செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. 2வது கட்ட தேர்தலில் 26 தொகுதிகளுக்கும், 3வது கட்டத் தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 24 தொகுதிகளுக்கு நாளை புதன்கிழமை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகுதிகளும், ஜம்முவில் எட்டு தொகுதிகளும்  உள்ளன. இந்த தொகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 219 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.


இதற்கிடையே பல்வேறு கட்சிகள் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாம் கட்ட தேர்தலுக்காக தீவிரமான பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்க இருக்கிறார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்