விஜய் "கெட்டப்" சரியில்லை.. ஜேம்ஸ் வசந்தன் அட்வைஸ் சரியா..??
Jan 03, 2023,12:36 PM IST
சென்னை: வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு விஜய் கேஷுவலான தோற்றத்துடன் சாதாரண சட்டை பேன்ட்டில் வந்தது சரியல்ல என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் என்ன உடை அணிய வேண்டும், எப்படி வர வேண்டும் என்றெல்லாம் சொல்ல யாருக்கும் அதிகாரமோ, தகுதியோ கிடையாது. தான் எப்படி இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் என்று விஜய் ரசிகர்கள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
சமீப காலமாக ஜேம்ஸ் வசந்தனின் பல கருத்துக்கள் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளன. குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜா குறித்த இவரது கருத்துக்கள் பல சூடான விவாதங்களை எழுப்பின. இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.
இதுகுறித்து ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூலில் போட்டுள்ள பதிவு:
வாரிசு' பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது.
தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது.
அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள். இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன்.
நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து
உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே?
ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது. தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.
எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில் இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.
நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே.
ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லை. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்!
முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வார��ங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள் என்று கூறியுள்ளார் வசந்தன்.
ஜேம்ஸ் வசந்தனின் இந்தக் கருத்தைப் பலர் பாராட்டியுள்ளனர். ஆனால் பலர் விமர்சித்துள்ளனர். விஜய் மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு மிகச் சிறப்பாக டிரஸ் செய்து வந்திருந்தார். இந்த விழாவுக்கு கேஷுவலாக வந்துள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது. ரஜினிகாந்த் கூடத்தான் தாடியுடன் இயல்பாக வருகிறார்.. அதையும் தவறு என்று சொல்வதா.. என்று சிலர் விமர்சிக்கவும் செய்துள்ளனர்.
சரி.. உங்க கருத்து என்ன?.. கீழே பதிவிடுங்கள்