Avaniapuram Jallikattu: சீறிப் பாய காளைகள் ரெடி.. எகிறி அடக்க காளையர்களும் தயார்.. விழாக்கோலம்!
மதுரை: மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியாக மதுரை மாநகரில் உள்ள அவனியாபுரத்தில் நாளை பொங்கல் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. காளைகளும், காளையர்களும் சீறிப் பாய்ந்து பொருதுவதற்கு ஆயத்தமாக உள்ளனர். மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையுடன் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
பொங்கல் வந்து விட்டது.. பொங்கல் வந்ததுமே முதலில் ஜல்லிக்கட்டுதான் அனைவரின் மனதிலும் தோன்றும்.. அந்த ஜல்லிக்கட்டு வந்து விட்டது. இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது. இந்த நிலையில் அடுத்த கட்ட கலகலப்புக்குத் தயாராகி விட்டார்கள் மக்கள்.
ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போனது மதுரை. மதுரை மாவட்டத்தில் மட்டும் 3 உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஒரே மாவட்டத்தில் அதிக அளவிலான, ஜல்லிக்கட்டு நடைபெறுவது மதுரையில் மட்டும்தான்.
நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
மதுரையில் முதலில் அவனியாபுரத்தில் பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டு நடைபெறும். அந்த வகையில் நாளை தைப் பொங்கல் தினத்தன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கோலாகலமாக நடந்தேறியுள்ளன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து நடத்தவுள்ளன.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் காளைகளும், மாடுபிடி வீரர்களும் ஏற்கனவே ஆன்லைன் மூலம் தங்களைப் பதிவு செய்து விட்டனர். மேலும் நாளை போட்டியில் பங்கேற்கத் தேவையான ஏற்பாடுகளும் பக்காவாக செய்யப்பட்டு விட்டது. வாடிவாசல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேடையும் அமைக்கப்பட்டு விட்டது. மாடுகளை அடக்கும் இடமும் தென்னம் நாறுகள் போட்டு ஜம்மென்று ரெடியாக உள்ளது.
தேவையான மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மாடு பிடி வீரர்களுக்கும், மாடுகளுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாடு பிடி வீரர்கள் மது அருந்தி வரக் கூடாது, மாடுகளின் மூக்கணாங்கயிறுகளை அறுக்க கத்தி கொண்டு வரக் கூடாது உள்பட ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளை யாராவது மீறினால் அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள முடியாது.
3 ஜல்லிக்கட்டுக்கு 12,000 காளைகள்
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள 3 ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள மொத்தமாக 12,176 காளைகளும், 4514 காளையர்களும் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.
இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 2400 காளைகளும், 1318 மாடு பிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். பாலமேட்டைப் பொறுத்தவரை 3677 காளைகளும்ம, 1412 காளையர்களும் பதிவு செய்துள்ளனர். அலங்காநல்லூரில்தான் அதிகம் பேர் பங்கேற்கவுள்ளனர். காளைகள் மட்டும் 6099 பதிவு செய்யப்பட்டுள்ளன. மாடு பிடி வீரர்கள் எண்ணிக்கை 1784 ஆகும்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெறும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் காலை 7 மணிக்கு தொடங்கும். 3 ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தொடங்கி வைப்பார். அமைச்சர் ப.மூர்த்தி உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளைக் காண வரவுள்ளனர். 3 ஜல்லிக்கட்டுக்கும் பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3 ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் காளைகளை அடக்குவோருக்கு ஏகப்பட்ட பரிசுகளும் காத்துள்ளன.
மதுக் கடைகளை மூட உத்தரவு
மதுரை மாவட்டத்தில் நாளை அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து அந்தந்த பகுதிகளில் (அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்) ஜல்லிக்கட்டு நடைபெறும் நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த 3 பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாட்களில் அனைத்து மதுக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.