ஜெயிலர் ரிலீஸ் : போட்டி போட்டு குறைந்த விலைக்கு விற்பனையான டிக்கெட்கள்
Aug 10, 2023,10:34 AM IST
சென்னை : ரஜினியின் ஜெயிலர் படம் ப்ரீ டிக்கெட் புக்கிங்கிலேயே உலகம் முழுவதும் பல கோடிகளை வசூல் செய்துள்ளது. அதே சமயம் இந்தியாவில் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு மாநிலமும் மிக குறைந்த விலைக்கு ஜெயிலர் பட டிக்கெட்களை விற்பனை செய்து அதிர்ச்சி அளித்துள்ளன.
அதே சமயம் ஐதராபாத்தில் ஜெயிலர் படத்தின் குறைந்த பட்ச டிக்கெட் விலையே ரூ.200 முதல் ரூ.250 ஆக உள்ளது. அதிகபட்சமாக ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. டில்லியில் ரூ.100 முதல் ரூ.150 என்ற அளவிலும், மும்பையில் ரூ.160 முதல் ரூ.180 என்ற அளவிலும் ஜெயிலர் பட டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ரஜினியின் 169 வது படமாக உருவாகி உள்ளது ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மோகன்லால், ஜாக்கி ஷரோஃப், ஷிவ் ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், தமன்னா, மிர்னா மேனன் உள்ளிட்ட இந்த படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ம் தேதியான இன்று ரிலீசாகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் ரூ.200 கோடியாகும்.
ஜெயிலர் படம் முதல் நாள் வசூலிலே ரூ.250 கோடியை தாண்டும் என நிபுணர்கள் கணித்திருந்தனர். ஆனால் ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் வேட்டையாட துவங்கியது ஜெயிலர். இந்தியாவில் ரூ.13 கோடிக்கும், அமெரிக்காவில் ரூ.6 கோடிக்கும் ஜெயிலர் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க ப்ரீ புக்கிங் செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் ஆன்லைனில் மட்டும் 87,000 டிக்கெட்களும், அமெரிக்காவில் 37,000 டிக்கெட்களும் விற்பனை செய்யப்பட்டது.
வழக்கமாக டாப் ஹீரோக்கள் படங்கள் என்றால் டிக்கெட் ரேட் எகிறும். குறைந்தது முதல் ஒரு வாரத்திற்காவது டிக்கெட்டே கிடைக்காது என்ற நிலை தான் ஏற்படும். அப்படியே கிடைத்தாலும் ஒரு டிக்கெட் ரூ.500 க்கு கூட விற்பனை செய்யப்படும். ஆனால் ஜெயிலர் படத்தின் டிக்கெட்களை ஒவ்வொரு மாநிலமும் போட்டி போட்டுக் கொண்டு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்து அனைவருக்கு��் அதிர்ச்சி கொடுத்துள்ளன. சென்னையில் மிக குறைந்த விலையாக ஜெயிலர் பட டிக்கெட் ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ காலை 9 மணிக்கு தான் திரையிடப்பட்டது. ஆனால் கேரளா, கர்நாடகாவில் காலை 6 மணிக்கே திரையிடப்பட்டது. இதனால் ரஜினி படத்தை முன்கூட்டியே பார்க்கும் ஆர்வத்தில் தமிழக ரசிகர்கள் பலர் கேரளாவிற்கும், பெங்களூருவிற்கும் படையெடுத்தனர். கேரளாவில் ஜெயிலர் பட டிக்கெட் ரூ.80 முதல் ரூ.160 க்கும் விற்கப்படுகிறது. சில தியேட்டர்களில் ரூ.100 க்கு விற்பனையாகிறது. பெங்களூருவில் ரூ.100 முதல் ரூ.150 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.