2000 கோடி போதைப் பொருள் கடத்தல்..மாஸ்டர் பிளானாக செயல்பட்ட சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது..!
சென்னை: ரூ. 2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட தமிழ் சினிமா திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. போதைப் பொருள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் சூடோ பெட்ரின் என்ற வேதிப்பொருள் டில்லியில் இருந்து ஆஸ்திரேலியா, மலேசியா, உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்துவதாக தகவல் தெரிய வந்தது.
இதனை அடுத்து இதில் சம்பந்தப்பட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக கைது செய்யப்பட்டவர்களில் மூளையாக செயல்பட்டது தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பதை போலீசார் கண்டறிந்தனர். பின்னர் அவரை விசாரிக்க சென்னை வந்த போலீசார் அவரது வீட்டில் சம்மன் ஒப்படைத்தனர். இதனை அறிந்த ஜாபர் சாதிக் தலைமறைவானார். இவரைப் பிடிக்க போலீசார் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். மேலும் இவர் வெளிநாடுகளுக்கு தப்பிக்காமல் இருக்க அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தனர்.
இதனை அடுத்து இவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு, இவருக்குப் ஐஎஸ்ஐ அமைப்பினருடன் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர வேட்டையில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து நேற்று ஜாபர் சாதிக் ஜெய்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தலைமறைவாக உள்ளார் என தமிழக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரமாக தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து இன்று கைது செய்துள்ளனர். பின்னர் உடனடியாக டில்லிக்கு அழைத்துச் சென்றனர். இவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்ட பிறகு இன்று பிற்பகல் இவரை பற்றிய தகவல் பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
மேலும் கடத்தலில் யார் பின்னணியாக இருந்து செயல்பட்டார் ..யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது ..என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.