திமுக மூலமாகத்தான்.. கமல்ஹாசன் எம்.பி ஆக வேண்டும் என்பது வேதனையானது.. அண்ணாமலை

Su.tha Arivalagan
Mar 10, 2024,06:43 PM IST

கோயம்புத்தூர்: கமல்ஹாசன் போன்ற ஒரு பெரிய நடிகர், அற்புதமான கலைஞன், திமுக மூலமாகத்தான் எம்.பி. ஆக வேண்டும் என்பது வேதனை தருகிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


கோவை வந்த அவர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கமல்ஹாசன், திமுக அணியில் இடம் பெற்றிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது, கமல்ஹாசன் மூத்த நடிகர், அற்புதமான நடிகர், அரசியலில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன்  கட்சி ஆரம்பித்தார். இன்னிக்கு தமிழகத்தின் அரசில், அரசியலில் மாற்றம் வேண்டும் என்றால் திமுக இருக்கக் கூடாது என்று தெரியும். ஆனால் கமல்ஹாசன் திமுக பக்கம் போய் இணைந்துள்ளார்.




இதுகுறித்து எல்லோரும், குறிப்பாக கோவை பகுதியில் என்னாச்சு என்று கேட்கிறார்கள். அரசியல் கடினமான வேலை. குறிப்பாக கொள்கை அரசியல் இன்னும் கடினமானது. கொண்ட கொள்கையில் தொடர்ந்து பயணிப்பது  கடினமானது. இது அவரோட முடிவு. ஆனால் இத்தனை காலமாக அவருடன் இருந்த தொண்டர்கள், அவரது கட்சியின் மூத்த தலைவர்கள், எல்லோருக்கும் ஏமாற்றம்.  மாற்றம் வேண்டும், யாரையும் சாராமல் செயல்பட வேண்டும் என்பது அவரது அரசியல் நிலைப்பாடாக  இருந்தது. ஆனால் முற்றிலும் மாறி திமுக பக்கம் போயிருப்பது திமுக என்ற தீய சக்தியின் ஆதிக்கம் இருப்பதை இது உணர்த்துகிறது. 


கமல்ஹாசன் தன்னை நம்பி வந்தவர்களையும், மாற்றம் கொடுக்க வேண்டும் என்று எதற்காக ஆரம்பித்தாரோ, மறுபடியும் அதே இடத்தில் போய் நிற்கிறார். மாற்றம் விரும்பும் அனைவருக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. ஊழல் இல்லாத நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கும் கட்சி பாஜகதான். திமுக இல்லாத அரசியல் வர வேண்டும் என்றால் அது பாஜகவால் மட்டுமே முடியும். இதனால்தான் வேறு வேறு கட்சிகளிலிருந்து விலகி இங்கு வருகிறார்கள். நம்பி வர வேண்டும். மாற்றம் கொடுக்க வேண்டும் என்று களம் இறங்கியுள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் நடத்திக் காட்டுவோம்.


கமல்ஹாசனை நாங்கள் புண்படுத்தவில்லை.  அவருக்கு இருந்த நிர்பந்தம், அரசியல் நடத்திப் பார்த்தார். மீண்டும் சினிமாவுக்குப் போனார், பிக் பாஸ் போனார்.. முடியவில்லை. முயற்சி எடுத்துப் பார்த்தார். அரசியல் ரொம்ப ரொம்ப கடினம். வேறு வழியில்லாமல் திமுகவிடம் சரணடையும் நிலைக்குப் போயிருக்கிறார். காரணம் திமுக இல்லாமல் படத்தை ரிலீஸ் பண்ண முடியாது. திமுக  சாராமல், உதயநிதி சாராமல் தியேட்டரில் ஒரு படத்தை ரிலீஸ் பண்ண முடியாது. கமல் படத்திற்கு கோ புரடக்ஷன்ஸாக உதயநிதி இருக்கிறார்.


கமல்ஹாசன் போன்ற பெரிய கலைஞன் திமுக ராஜ்யசபா சீட்டில்தான் நாடாளுமன்றத்திற்குப் போக வேண்டும் என்பது வேதனை அளிக்கிறது. சரியான பக்கம் இருந்திருந்தால், அவருக்குான அரசியல் வெகுமதிகள் எப்போதோ வந்திருக்கும் என்றார் அண்ணாமலை.