கட்சியில் சேருமாறு.. என்னை பாஜக அழைத்தது உண்மை தான்.. கூறுகிறார் திவ்யா சத்யராஜ்

Meenakshi
Mar 02, 2024,05:45 PM IST

சென்னை: நான் தனி கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை. வரும் தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியில் இருந்து அழைப்பு வந்தது உண்மை. அது பாஜகதான். ஆனால் பாஜகவில் சேர விருப்பமில்லை. தேர்தல் முடிந்ததும் எந்த கட்சியில் இணையப் போகிறேன் என்பதை சொல்கிறேன் என்று கூறியுள்ளார் திவ்யா சத்யராஜ்.


நடிகர் சத்யராஜின் மகள்தான் திவ்யா சத்யராஜ். இவர் ஒரு ஊட்டச்சத்து நிபுணராக வலம் வருகிறார். இவர் மகிழ்மதி என்ற பெயரில் ஒரு இயக்கம் ஆரம்பித்து சில தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்கும் பணியையும் செய்து வருகிறார்.


இவருக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என்று முன்னரே கூறியிருந்தார். இந்நிலையில் இவரை பாஜக அழைத்ததாக ஒரு செய்தி பரவிய நிலையில், அதற்கு திவ்யா சத்யராஜ் விளக்கம் கூறியுள்ளார். இது குறித்து ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என பல முறை கூறியிருக்கிறேன். உடனே நீங்கள் எம்.பி. ஆக வேண்டும் என அரசியலுக்கு வருகிறீர்களா? அமைச்சர் பதவிக்கு ஆசை உண்டா? உங்கள் அப்பா பிரச்சாரம் செய்வாரா?  என பல கேள்விகள் வந்தன. 




நான் பதவிக்காகவோ தேர்தலில் வெல்ல வேண்டும் என்றோ அரசியலுக்கும் வரவில்லை. மக்களுக்காக வேலை செய்ய வேண்டும் களப்பணி செய்ய வேண்டும் என்று ஆசையில் தான் அரசியலுக்கு வர நினைக்கின்றேன்.  ஏற்கனவே களப்பணிகள் செய்து வருகின்றேன். மகிழ்மதி என்ற இயக்கம் மூன்று வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்து அதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கி வருகின்றேன். 


நான் தனி கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை. வரும் தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியில் இருந்து அழைப்பு வந்தது உண்மை. பிஜேபியில் சேர விருப்பமில்லை. தேர்தல் முடிந்ததும் எந்த கட்சியில் இணையப் போகிறேன் என்பதை சொல்கிறேன். நான் அரசியலில் எந்த முடிவு எடுத்தாலும் எனது அப்பா பக்க பலமாக இருப்பார் என்று கூறியுள்ளார்.