தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
சென்னை: தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம், அவர் மட்டுமே தலைவர் பதவிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அண்ணாமலையை மாற்றி விட்டு புதிய தலைவரை நியமிக்கும் பணிகள் பாஜகவில் தொடங்கியுள்ளன. அடுத்த தலைவரை போட்டியின்றி தேர்வு செய்ய பாஜக மேலிடம் முடிவு செய்தது. இதையடுத்து பல்வேறு தலைவர்களின் பெயர்கள் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு கடைசியாக நயினார் நாகேந்திரனை முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று இரவு சென்னைக்கு வந்த அவர், இது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையின்போது கூட்டணி தொடர்பாகவும், புதிய பாஜக தலைவர் குறித்தும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. இன்று ஆடிட்டர் குருமூர்த்தியை அவரது இல்லத்திற்குப் போய் சந்தித்துப் பேசினார் அமித்ஷா.
மறுபக்கம் தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் புதிய பாஜக தலைவர் பதவிக்கான விருப்ப மனு பெறப்பட்டது. அப்போது நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு கொடுத்தார். இதற்காக கமலாலயம் வந்த நயினார் நாகேந்திரன், வாயிலை தொட்டு கும்பிட்டு உள்ளே சென்றார். மாநில துணைத் தலைவரும் தேர்தல் அதிகாரியுமான சக்கவர்த்தியிடம் தனது விருப்ப மனுவை அளித்தார் நயினார் நாகேந்திரன்.
அப்போது அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், எல் முருகன், எச். ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால் நயினார் நாகேந்திரன் பாஜகவில் 8 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றியுள்ளார் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெளியான அறிவிக்கையிலும் கூட இந்த விதி தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. இருப்பினும் நாகேந்திரனுக்கு நிபந்தனைகள் தளர்த்தி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி
விருப்ப மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறுகையில், கட்சியின் அறிவுரைப்படி நான் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறேன். வேட்பு மனு மீதான பரிசீலனை செய்து அதிகாரிகள் முடிவெடுப்பார்கள். கட்சி அறிவுரைப்படியே நான் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். என்னைப் பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி. 10 வருட கால விதி குறித்து தேர்தல் அதிகாரியிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு தாக்கல் செய்ய கட்சி மேலிடம் அனுமதி கொடுத்திருக்கிறதாம். எனவே, கட்சி தலைவராக நயினார் நாகேந்திரனை போட்டியின்றி தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிகிறது. நாளை கட்சி தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
யார் இந்த நயினார் நாகேந்திரன்?
ஒரு காலத்தில் அதிமுகவில் கெத்தாக வலம் வந்தவர் நயினார் நாகேந்திரன். மறைந்த ஜெயலலிதாவின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றவர்.
1960ம் ஆண்டு நெல்லையில் பிறந்தவரான நயினார் நாகேந்திரன் தற்போது திருநெல்வேலி தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்டசபை பாஜக தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
2001ம் ஆண்டு முதல் முறையாக அவர் சட்டசபைக்குத் தேர்வானார். 2011ல் மீண்டும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு தேர்தல்களிலும் அவர் அதிமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்வானார். ஜெயலலிதாவின் 2001-2016 அமைச்சரவையில் நயினார் நாகேந்திரன் இடம் பெற்று முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். 2016 தேரத்லில் அவர் தோல்வியுற்றார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவுக்கு போய் விட்டார். 2019 லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இருப்பினும் 2021 சட்டசபைத் தேர்தலில் நெல்லையில் போட்டியிட்டு வென்றார். அத்தேர்தலில் மொத்தம் 4 பேர் மட்டுமே பாஜக சார்பில் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.