சென்னையில்.. பூத் ஸ்லிப் வழங்கும்.. பணி இன்று முதல் தொடக்கம்.. தேர்தல் பணிகள் விறு விறு!

Manjula Devi
Apr 01, 2024,03:30 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. இந்த பணிகளை வரும் ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.


லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 39 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பூத் ஸ்லிப் வழங்குவதில் குழப்பம் ஏற்படுவதால் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் யாரும் பூத் ஸ்லிப் வழங்க கூடாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே திட்டவட்டமாக  கூறியிருந்தது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள் பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.




இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. இந்தப் பணிகள் இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகள் வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.


சென்னையில் முதற்கட்டமாக, பூத் கமிட்டி தலைமை அதிகாரிகளுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பூத் ஸ்லிப் வழங்கும் பணியை ஆய்வு செய்து வருகிறார். அவரே நேரில் சென்று இந்தப் பணிகளை மேற்பார்வையிட்டார்.