"அந்த நிலாவைத்தான்"... சந்திரயான் 3.. நேரலையில் கண்டுகளிக்க தயாராகும் இந்தியர்கள்!

Su.tha Arivalagan
Aug 22, 2023,04:23 PM IST

பெங்களூரு: நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலம் நாளை நிலவில் தரையிறங்கப் போகும் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.


இதை நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகள், செய்தி இணையதளங்கள் ஆகியவற்றிலும் கூட இதை நேரடியாக கண்டு ரசிக்க மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். 


சந்திராயன்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஜூலை 14 உள்ளூர் நேரம் பிற்பகல் 2 .35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்து. அதன் பிறகு அதிலிருந்து லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட லேண்டர் நாளை நிலவில் தரையிறங்கவுள்ளது.


விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க இன்னும் 25 கிலோ மீட்டர் தொலைவு தான் உள்ளது. நாளை தரையிறங்கும் நிகழ்வை, இஸ்ரோ தனது இணையதளம் மூலம் நேரலையாக நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவுள்ளது இதை அனைத்து கல்வி நிலையங்களும் ஒளிபரப்பும்.


நிலவின் தென் துருவப் பகுதி என்பது அதிகம் சூரிய ஒளிபடாத திசையாகும். பூமியின் பார்வைக்கு அந்தப் பக்கம் இருப்பதாகும். இந்தப் பகுதியில் இதுவரை யாரும் இறங்கியதில்லை. உலக நாடுகளிலேயே முதல் முறையாக இந்தியா தான் சந்திராயன்-3 விண்கலத்தை தென் துருவப் பகுதியில் தரையிறக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.