"வாவ்... கருப்பு நிலா"..  சந்திரயான் 3 விண்கலம் எடுத்த புத்தம் புதிய நிலாவின் புகைப்படம்!

Su.tha Arivalagan
Aug 18, 2023,05:03 PM IST
டெல்லி: சந்திரயான் 3 விண்கலம் எடுத்துள்ள புதிய நிலவுப் புகைப்படம் வெளியாகி இந்தியர்களை புல்லரிக்க வைத்துள்ளது. அத்தனை அழகான கோலத்தில் நிலவின் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளது சந்திரயான் 3.

இந்தப் புகைப்படமானது விக்ரம் லேன்டரிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள முதல் கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது. ஆகஸ்ட் 17ம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து லேன்டர் பிரிந்த பின்னர் எடுக்கப்பட்ட முதல் புகைப்படமும் கூட. இந்த புகைப்படத்தில் நிலவின் தோற்றம் மிக மிக அழகாக காணப்படுகிறது. கருப்பு  நிறத்துடன் காணப்படும் நிலாவின் தரைப்பகுதியை தெளிவாக காண முடிகிறது. ஆகஸ்ட் 23ம் தேதி இங்குதான் சந்திரயான் 3 விண்கலம் இறங்கவுள்ளது. 



இந்த புகைப்படத்தில் நிலவில் உள்ள பேப்ரி, கியார்டனோனா ப்ரூனோ, ஹர்கெபி ஜே ஆகிய பகுதிகள் தெளிவாக தெரிகின்றன. இந்தப் பகுதியில் ஒரு இடத்தில்தான் சந்திரயான் 3 விண்கலம் இறங்கவுள்ளது.

பூமியிலிருந்து பார்க்கும்போது வெள்ளை வெளீர் என காட்சி தரும் நிலாவை கருமையான தோற்றத்தில் பார்ப்பதே வித்தியாசமாக உள்ளது. இந்தப் புகைப்படத்தை இந்தியர்கள் வெகு வேகமாக டிவிட்டரில் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.