PSLV-C56 மூலம் செலுத்தப்பட்ட 6 செயற்கைகோள்கள்.. புவி வட்டப் பாதையில் விடப்பட்டது

Aadmika
Jul 30, 2023,10:03 AM IST
ஸ்ரீஹரிகோட்டா : 6 துணை செயற்கைகோள்களை தாங்கியபடி இஸ்ரோவின் PSLV-C56 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 06.30 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. தற்போது அவை வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் விடப்பட்டுள்ளன.

PSLV யின் 58 வது ராக்கெட்டான PSLV-C56 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்ணில் மையத்தில் இருந்து ஏவப்பட்டது. வெற்றிகரமாக ஏவப்பட்ட 6 செயற்கைக் கோள்களும் பூமியின் கீழ் நீள்வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த 6 துணை செயற்கைகோள்களையும் PSLV-C56 தாங்கிச் சென்றது.



DS-SAR என்ற சிங்கப்பூர் நிறுவனத்தின் செயற்கைகோள் பூமியின் வெளிப்புற ரேடாரில் பயணித்து படங்களை பூமிக்கு அனுப்ப உள்ளது. மிக துல்லியமான படங்களை பூமிக்கு அனுப்புவதற்கும், ஜிஐஎஸ் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காகவும் இந்த செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து காலநிலைகளிலும் இரவு - பகலாக இது பூமியின் செயல்பாட்டினை கண்காணித்து படங்களை அனுப்பும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சமீபத்தில்தான் சந்திரயான்  3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. தற்போது வணிக ரீதியிலான இந்த ராக்கெட் ஏவுதலையும் அது வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.