பாலஸ்தீனத்திற்கு ஆதரவு.. இஸ்ரேல் அரபு நடிகை மைசா கைது

Su.tha Arivalagan
Oct 25, 2023,12:59 PM IST

டெல் அவிவ்: பாலஸ்தீனத்திற்கு தனது வலுவான ஆதரவைத் தெரிவித்ததற்காக, அரபு இஸ்ரேலி நடிகை மைசா அப்த் எல்ஹாதி கைது செய்யப்பட்டுள்ளார்.


இஸ்ரேலிய நடிகையான மைசா, அரபு பெற்றோருக்குப் பிறந்தவர். தன்னை ஒரு பாலஸ்தீனிய பெண் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்பவர். கடந்த 2021ம் ஆண்டு ஹைபா நகரில் நடந்த அமைதியான பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தின்போது போலீஸார் இவரை நோக்கி சுட்டதில் காயமடைந்தவர்.


இந்த நிலையில் தற்போது இஸ்ரேல் -ஹமாஸ் இடையிலான போரில் அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கொல்லப்படுவது குறித்து வேதனையும் கண்டனமும் தெரிவித்திருந்தார் மைசா. மேலும் பாலஸ்தீனத்திற்கு தனது ஆதரவையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார் . இதையடுத்து அவரை இஸ்ரேல் பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது.




இதுகுறித்து இஸ்ரேல் தரப்பில் கூறுகையில்,  மைசா தொடர்ந்து ஹமாஸுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார். அவர்களது வன்முறையை ஆதரிப்பது போல பேசி வந்தார்.  ஹமாஸ், யூதர்கள் மீது தொடுத்த தாக்குதலை ஆதரிப்பது போல பேசி வந்தார். அவர் தொடர்ந்து ஹமாஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் அவர் கைது செய்யப்பட்டார் என்று விளக்கப்பட்டது.


நாசரேத் நகர்தான் மைசாவின் சொந்த ஊராகும். அங்கு வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மைசா போட்டிருந்த ஒரு சமூக வலைதள பதிவில், இஸ்ரேல்  - காஸா இடையிலான எல்லைப்புற வேலி உடைக்கப்பட்ட படத்தைப் போட்டு, அதன் கீழே, நாம் ஜெர்மனி பாணியில் செல்வோம் என்று கூறியிருந்தார். இதுதான் இஸ்ரேல் அரசை கடுப்பாக்கி விட்டது.


ஹமாஸுக்கு எதிராக தொடர்ந்து இடைவிடாத தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல். ஹமாஸ், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.