சுற்றிலும் குண்டு மழை.. மலர்ந்து சிரித்த மழலை பூ!

Su.tha Arivalagan
Oct 13, 2023,06:44 PM IST

- மஞ்சுளா தேவி


காஸா: சுற்றிலும் குண்டு மழை.. திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம்.. யாரைப் பார்த்தாலும் ரத்தக் காயம்.. உயிர் அடுத்த விநாடி இருக்குமா என்று தெரியாத நிலையில்லாத வாழ்க்கை.. இத்தனைக்கு மத்தியிலும் அந்த அழகான குழந்தையை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் முகம் தெரியாத அந்த பத்திரிகையாளர்.


உலகையே உலுக்கிப் போட்டுள்ளது இந்த வீடியோ. காஸாவில் இஸ்ரேல் செய்து கொண்டிருக்கும் வரலாறு காணாத தாக்குதலின் வீரியத்தை இந்த ஒற்றை வீடியோ வெளிக்காட்டி விட்டது. அட போங்கடா பெரியவங்களா.. நீங்க அடிச்சுட்டு சாவுங்கடா.. நான் ஏன்டா சாகணும்.. என்று அந்த சின்னக் குழந்தையின் பிஞ்சு சிரிப்பு சொல்வது போல உள்ளது.  அந்தக் குழந்தையைப் பார்க்கப் பார்க்க மனதெல்லாம் வலிக்கிறது.




சிரிப்புகள் பலவிதம்.. அதிலும் மழலையின் சிரிப்பு.. பேரானந்தம்..  வெளியில் இருந்து எத்தனை கோபத்துடன் வந்தாலும் மழலையின் ஒரு சிரிப்பு போதும் அத்தனை கவலைகளையும் ,கோபங்களையும் மறப்பதற்கு. குழந்தையின் சிரிக்கும் முகத்தைப் பார்த்தால் நம் கவலைகள் மறந்து நாமும் குழந்தையாகவே மாறி விடுவோம். அப்படிப்பட்ட குழந்தையின் சிரிப்பை கண் நிறைய கண்ணீருடனும், மனம் நிறைய வேதனையுடனும் பார்த்து ரசிக்கும் நிலைக்கு உலகம் தள்ளப்பட்டுள்ளது.


"நாளை நான் இருப்பேனா என்று தெரியவில்லை.. எனவே இப்போதே நன்றாக சிரித்துக் கொள்கிறேன்" என்று அந்தக் குழந்தை சொல்வது போலவே உள்ளது நமக்கு. நிச்சயம் இவனது தாத்தாவும் சுதந்திரத்திற்காக போராடியிருப்பார்.. இவனது தந்தையும் போராடியிருப்பார்.. நாளை வளர்ந்து வாலிபனாகும்போது இவனும் போராட்டக் களத்தில் இருப்பானா அல்லது சுதந்திர பாலஸ்தீனக் காற்றை சுவாசித்துக் கொண்டிருப்பானா என்று தெரியவில்லை.




பாலஸ்தீனத்திற்குட்பட்ட காஸாவை குண்டு மழையால் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். அந்தத் தாக்குதலில் சிக்கி பலரும் உயிரிழந்து வருகின்றனர். பலர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இப்படிப்பட்ட தாக்குதலில் சிக்கி பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தைதான் இது. அந்தக் குழந்தை சாலையோரமாக தரையில் படுக்க வைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழந்தைக்கு அருகே முட்டிக் கால் போட்டு ஒரு பத்திரிகையாளர் குழந்தையுடன் விளையாடுகிறார்.. "ஜுஜ்ஜுஜுஜு" என்று அவர் சொல்லச் சொல்ல குழந்தை பொங்கிப் பொங்கி சிரிக்கிறது.


சுற்றிலும் என்ன நடக்கிறது என்று அந்தக் குழந்தைக்குத் தெரியாது. அப்பா, அம்மா எங்கே என்று தேடும் அளவுக்கும் அது வளர்ந்த குழந்தை இல்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை. போர் தேசத்தில் பிறந்தது அதன் குற்றமும் அல்ல.. இப்படிப்பட்ட சூழலில் அந்தக் குழந்தையின் கள்ளம் கபடமில்லாத அந்த வெள்ளைச் சிரிப்பு மனதை உலுக்குகிறது. அந்த குழந்தையை சிரிக்க வைக்க செய்யும் முயற்சியை பார்க்கும் போது நம் மனதை உருக செய்கிறது. 




அந்தக் குழந்தையின் சிரிப்பைப் பார்க்கும்போது, எனக்கு விளையாட்டு காட்ட ஒருவர் கிடைத்து விட்டார்.. என்னை சந்தோஷப்படுத்துகிறார்.. நான் சந்தோஷமாக சிரிக்கிறேன்.. என்றுதான் அக்குழந்தை நினைத்திருக்கும்.. எல்லோரும் குழந்தைகளாக இருந்து விட்டால் இந்தப் போரெல்லாம் வந்திருக்கவே வந்திருக்காது இல்லையா!


கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் 5000 ஏவுகணைகளை செலுத்தி தாக்குதலை தொடங்கினர். இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல் போரை அறிவித்தது. பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. காசாவை துளைத்தெடுத்து வருகிறது. இதுவரை இஸ்ரேல் தரப்பில் 1000க்கும் மேற்பட்டோரும், ஹமாஸ் தரப்பில் 3000க்கு மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர். போர் எப்போது ஓயும் என்று தெரியவில்லை.