பாலஸ்தீனியர்களை நீக்கி விட்டு.. 1 லட்சம் இந்தியர்களை வேலையில் அமர்த்த இஸ்ரேல் திட்டம்!

Meenakshi
Nov 08, 2023,04:57 PM IST

டெல்லி: இஸ்ரேலில் வேலை பார்த்து வரும் பாலஸ்தீன தொழிலாளர்களை நீக்கி விட்டு அவர்களுக்குப் பதில், ஒரு லட்சம் இந்தியர்களை வேலையில் அமர்த்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.


பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி தாக்குதலை தொடங்கினர். இஸ்ரேலும் பதிலுக்கு தாக்குதல் நடத்த இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லை பகுதிகளில் துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு என அப்பகுதிகளில் ரத்தக்காடாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதி முழுவதும்  பதற்றம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. 


போரில் இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். போர் தொடங்கி ஒரு மாத காலத்தை நிறைவு செய்த நிலையில் போர் நிறுத்தத்திற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. இந்த நிலையில் தற்போது பாலஸ்தீனியர்களின் அடி வயிற்றில் அடிக்கும் வேலையில் இறங்கியுள்ளது இஸ்ரேல்.




இஸ்ரேலின் கட்டுமான துறையில் பணிபுரிந்த 25 சதவீத பாலஸ்தீனியர்கள். போர் காரணமாக அவர்களது ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டது.  இந்த போரைத் தொடர்ந்து, இஸ்ரேலில் பணியாற்றி வந்த, 90,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களுக்கான பணி உரிமமத்தை, இஸ்ரேல் அரசு சமீபத்தில் ரத்து செய்துள்ளது. அவர்கள் அனைவரும்‌ அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 


இதன் காரணமாக இஸ்ரேல் கட்டுமானத்துறையில் காலியிடங்கள் அதிகமாகி கட்டுமானத்துறையும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில்தான், "கட்டுமானப் பணிகள் பலவும் தேங்கிக் கிடக்கின்றன. அதுமட்டுமில்லாமல் போரின் காரணமாக பல்வேறு சேதங்களும் நிகழ்ந்துள்ளன. கட்டுமானத் துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனர்களின் வெற்றிடத்தை நிரப்பவும், துறையை இயக்கி இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.


இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் தொழிலாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேல் அரசிடமும் அனுமதி கேட்டுள்ளோம். இரு நாடுகளும் சம்மதித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்" என இஸ்ரேலிய பில்டர்ஸ் அசோசியேஷன் துணை தலைவர் ஹைம் ஃபெய்க்லின் தெரிவித்துள்ளார்.


ஒரு வேளை இது நடந்தால் பதிலுக்கு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வளை குடா நாடுகள் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் இந்திய அரசு எப்படி செயல்படும் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.