"வீட்டை விட்டு ஓடிருங்க".. 10 லட்சம் காஸா மக்களுக்கு இஸ்ரேல் மிரட்டல்!

Su.tha Arivalagan
Oct 13, 2023,10:55 AM IST

டெல் அவிவ்: வடக்கு காஸாவில் இருக்கும் கிட்டத்தட்ட 10 லட்சம்  மக்களை 24 மணி நேரத்திற்குள் தென் பகுதிக்கு இடம் பெயர்ந்து விட வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது. இதற்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை உடனடியாக இஸ்ரேல் ராணுவம் திரும்பப் பெற வேண்டும் என்று அது கோரிக்கை விடுத்துள்ளது.


காஸா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது இஸ்ரேல். இதுவரை வான்வெளி மூலமாக தாக்குதல் நடத்தி வந்த நிலையில் அடுத்து தரை வழித் தாக்குதலை தொடங்கவுள்ளது இஸ்ரேல். இதற்காக வடக்கு எல்லை நெடுகிலும் ராணுவத்தினர் குவித்து வைக்கப்பட்டு வருகினறனர். வான்வெளித் தாக்குலில் கிட்டத்தடட மொத்த காஸா பிராந்தியமும் சிதைந்து சீரழிந்து விட்டது. இந்த நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.




இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை தொடங்கவுள்ளது. இஸ்ரேலிலிருந்து பிடித்துச் செல்லப்பட் பிணைக் கைதிகளை ஹமாஸ் போராளிகள், பதுங்கு குழிகளில்தான் தங்க வைத்துள்ளனர். அவர்களை மீட்க இஸ்ரேல் ராணுவம் தீவிரத் தாக்குதலை தொடங்கவுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் அப்பாவி பொதுமக்களை குறிப்பாக பெண்கள், குழந்தைகளை பாதுகாப்புக் கவசமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதில் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. ஹமாஸிடமிருந்து விலகி இருப்பதே உங்களுக்கு நல்லது.


உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள வடக்கிலிருந்து முழுமையாக அகன்று தென் பகுதிக்குப் போய் விடுங்கள். 24 மணி நேரம் உங்களுக்கு அவகாசம் கொடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளது இஸ்ரேல் ராணுவம். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு காஸாவில் கிட்டத்தட்ட10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களை 24 மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்துவது என்பது இயலாத காரியம்.


இஸ்ரேலின் இந்த அடாவடி உத்தரவுக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. மிகக் குறுகிய காலத்திற்குள் இத்தனை லட்சம் பேரை இடம் பெயரச் சொல்வது மிகப் பேரழிவான சூழலையே ஏற்படுத்தும். இஸ்ரேல் ராணுவம் உடனடியாக தனது உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஐ.நா. சபை கூறியுள்ளது. ஆனால் இதையெல்லாம் இஸ்ரேல் காதில் போட்டுக் கொள்வதாகவே தெரியவில்லை.


இதில் என்ன கொடுமை என்றால் காஸாவில் ஐ.நா.வின் சார்பில் இயங்கி வரும் கிளினிக்குகள், பள்ளிக்கூடங்களையும் கூட மூடி விட்டு அவர்களும் போய் விட வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் மிரட்டியுள்ளது. இதுவும் ஐ.நா. கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் இஸ்ரேலை எதிர்த்து ஐ.நா.வால் எதுவும் செய்ய முடியாத நிலை. காரணம், அமெரிக்காவின் முழு ஆதரவும் இஸ்ரேலுக்கு உள்ளது.


இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை தொடுக்கத் துடிப்பதற்கு முக்கியக் காரணமே, காஸாவில் ஒருவர் கூட உயிருடன் இருக்கக் கூடாது.. மொத்தப் பேரையும் அழித்து விட்டு மொத்த காஸைவையும் கைப்பற்றும் நோக்கில்தான் என்று பலரும் அஞ்சுகிறார்கள்.


கடந்த ஒரு வாரமாக இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் 1200 பேர் இறந்துள்ளனர். காஸாவில் 3000க்கும் ஏற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் இஸ்ரேலுக்குள் ஊடுறுவி, அங்கு வைத்து இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டவர்கள் ஆவர். இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்து 150க்கும் மேற்பட்டோரை, ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை.


காஸா நகரை முழுமையாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், அங்கு குடிநீர், மின்சாரம், எரிபொருள், உணவு என எல்லாவற்றையும் துண்டித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.