Racist comment.. ஜஸ்ப்ரீத் பும்ரா குறித்து இனவெறி கருத்து.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் இஷா குஹா

Su.tha Arivalagan
Dec 16, 2024,05:57 PM IST

டெல்லி: இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா குறித்து இனவெறி கருத்தை தெரிவித்ததற்காக, இங்கிலாந்து முன்னாள் வீராங்கனையும், தற்போது டிவி வர்னணையாளராக செயல்பட்டு வருபவருமான இஷா குஹா பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.


தான் கிரிக்கெட் கமென்டரி கொடுத்தபோது தெரிவித்த கருத்துக்காக, அதே தொலைக்காட்சியில் நேரலையின்போது தனது கருத்துக்காக வருந்துவதாக கூறி பகிரங்கமாக மன்னிப்பு தெரிவித்தார்.




இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இரு அணிகளும் இதுவரை 2 போட்டிகளில் மோதி, ஆளுக்கு ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. 3வது போட்டி பிரிஸ்பேனின் கப்பா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தின்போது, பும்ரா 76 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை சாய்த்து அசத்தினார். அப்போது, டிவி வர்னணையின்போது இஷா குஹா, குரங்கு என்ற பொருள் வரும்படியான வார்த்தையைப் பயன்படுத்தி பும்ராவைக் குறிப்பிட்டார். இதனால் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.


அதாவது Most valuable primate என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார். இதுதான் சர்ச்சையைக் கிளப்பி விட்டது. பும்ராவைப் பாராட்டும் விதமாகவே அவர் பேசினார் என்றாலும் கூட தேவையில்லாமல் பிரைமேட் என்ற வார்த்தை குரங்கைக் குறிப்பிடும் வார்த்தையை அவர் பயன்படுத்தியதால் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து இஷா குஹாவை பலரும் கண்டித்து கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். 


இதையடுத்து தான் கமெண்டரி கொடுத்து வரும் பாக்ஸ் டிவியின் நேரலையில் தனது பேச்சுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் இஷா குஹா. தான் எந்த உள்நோக்கத்துடனும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்றும், அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக மிக மிக வருத்தப்படுவதாகவும், பகிரங்கமாக , மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார் இஷா குஹா.


இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இஷா குஹா, இங்கிலாந்து அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்