Water Diet.. தண்ணீர் விரதம் நல்லதா கெட்டதா.. எப்படி கடைப்பிடிக்கலாம்.. டாக்டர்கள் தரும் அட்வைஸ்!

Manjula Devi
Jul 08, 2024,05:52 PM IST

இன்றைய காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை போன்றவற்றின் அடிப்படையில் மக்கள் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். பின்னர் இந்த உடல் பருமனை குறைக்க மக்கள் பல்வேறு யுத்திகளையும்  கையாண்டு வருகின்றனர். குறிப்பாக  விதம் விதமான டயட்களை கடைப்பிடிக்கின்றனர்.


பேலியோ டயட், அதாவது அரிசி சாதம் இன்றி முட்டை டயட், பச்சை காய்கறி டயட், பழச்சாறு டயட், சப்பாத்தி டயட், போன்றவை எடுத்துக்கொண்டு உடல் எடையை குறைக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது பலருக்கு செட் ஆனாலும் கூட, சிலருக்கு உடலில் பலவித பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடுகிறது. 


அந்த வரிசையில்  அடிடாஸ் மில்லர் என்பவர் சமீபத்தில் உடல் எடையை குறைக்க தண்ணீர் டயட்டை கடைப்பிடித்துள்ளார். அதாவது, அவர் எந்த ஆகாரமும் இல்லாமல் 21 நாட்கள் வெறும் தண்ணீர் மட்டுமே குடித்தாராம். 21 நாட்களுக்கு பிறகு அவரது  உடல் எடை கணிசமாக குறைத்துள்ளதாம். இவரின் இந்த உடல் எடை குறைப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து பலரும் இதை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.




 21 நாட்கள் தண்ணீர் மட்டுமே குடித்து உடல் எடையை குறைக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் நன்றாக சாப்பிட்டு வரும் ஒருவர் திடீரென எந்த ஆகாரமும் இன்றி தண்ணீர் மட்டுமே குடித்து உடல் எடையை குறைப்பது என்பது உடலில் பலவித பிரச்சனைகளை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


விரதங்கள் நல்லதுதான்.. ஆனால்!


உண்மையில் விரதங்கள் நல்லதுதான். நமது பாரம்பரியத்தில் விரதம் என்பது ஒரு கலாச்சார மத சடங்காக கடைப்பிடிக்கப்படுகிறது.  ஆனால் உண்மையில் விரதம் இருக்கும்போது நமது உடலில் கழிவுகள் சுத்திகரிக்கப்படுகிறது.  வயிற்றில் தேங்கும் தேவையில்லாத கொழுப்பு, கழிவுகளை அகற்ற இந்த விரதம் உதவுகிறது. மதத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால் நாம் விரதம் கடைப்பிடித்தாலும் கூட அதில் அறிவியலே பிரதானமாக உள்ளது. ஆனால் விரதம் திடீரென இருந்து வி ட முடியாது. இருக்கவும் கூடாது.. படிப்படியாகத்தான் அதன் அளவை நாம் நிர்ணயிக்க வேண்டும். அதுதான் உடம்புக்கு நல்லது.


தண்ணீர் டயட்டால் என்னென்ன பாதிப்புகள்?


தண்ணீர் மட்டுமே குடித்து உடல் எடையை குறைப்பதனால் உடலில் வைட்டமின்கள், கால்சியம், மெக்னீசியம், மற்றும் புரதங்கள் குறையும். இது தவிர நமது உடல் பலவீனமடையும். அது பல வித நோய்களுக்கு வழிவகுக்கும். அதேபோல்  அதிகப்படியான தண்ணீர் மட்டுமே குடிப்பதன் மூலம் நீரிழிப்பு நோயும் ஏற்படும். எனவே தண்ணீர் டயட்டை எடுத்த எடுப்பிலேயே, உரிய ஆலோசனை இல்லாமல் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.


நிபுணர்கள் தரும் எச்சரிக்கை:




நாம் அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லது. ஆனால் தண்ணீர் மட்டுமே நமது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. இப்படி அதிக அளவு தண்ணீரை மட்டுமே குடித்து உணவு சாப்பிடாமல் இருந்து, நீண்ட இடைவெளிக்கு பின்னர் உணவு சாப்பிடும் போது நமது உடல் எடை அதிகரித்து வளர்ச்சிதை மாற்றத்தில் சிக்கல் ஏற்படுமாம்.  மேலும் தண்ணீரில் எல்லா சத்துக்களும் கிடையாது. நமது உடலுக்கு எல்லா வகையான சத்துக்களும் தேவைப்படும். எனவே வெறும் தண்ணீர் மட்டும் கை கொடுக்காது.


கவனமாக இருக்க வேண்டியவர்கள்:


நீரிழிவு நோய் அல்லது இதய பிரச்சனை இருந்தால் நீங்கள் இதுபோல் தண்ணீர் டயட்டை கண்டிப்பாக கடைப்பிடிக்கக் கூடாதாம். து போன்ற டயட்டுகளை பின்பற்ற வேண்டும் என்றால் அதற்கு முன் நீங்கள்  மருத்துவரை அணுகி அவர்களின் பரிந்துரைப்படி மேற்கொள்ள வேண்டும்.


தண்ணீர் டயட் மட்டுமல், உடல் எடைக் குறைப்பு உள்ளிட்ட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி உரிய மருத்துவர்களிடம் முறையான ஆலோசனை பெற்று அதை கடைப்பிடிப்பதும், பின்பற்றுவதுமே முக்கியமானது, நல்லதும் கூட. யூடியூபில் சொல்லி விட்டார்கள் என்று உடனடியாக அதைப் பார்த்து விட்டு நாம் ஏதாவது செய்தோமானால் அது நமது உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடும். ஸோ, கவனம் மக்களே.