புத்தகம் சரியா.. இல்லை.. ."பொத்தகம்" சரியா.. வாங்க வாசிக்கலாம்!

Su.tha Arivalagan
Jan 02, 2023,12:27 PM IST

ஒரு டிவீட் பார்க்க நேர்ந்தது.. கொஞ்சம் பழைய டிவீட்தான்.. போட்டிருந்தவர் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன். அது ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ்.. அதில் இடம் பெற்றிருந்த வாசகம்.. "பொத்தக வெளியீட்டு விழா".. பெரும்பாலும் புத்தக வெளியீட்டு விழா, நூல் வெளியீடு என்றுதான் பார்த்திருப்போம்.. இது வித்தியாசமாக பட்டது (எனக்கு அல்ல).. பொத்தகம் சரியா.. புத்தகம் சரியா என்ற வாதமும் கூடவே நினைவுக்கும் வந்தது.

அதுதொடர்பான ஒரு விளக்க கட்டுரை (ரொம்ப குட்டிதான்.. தைரியமா படிங்க).. நினைவுக்கு வந்தது.. நாலு பேருக்கு உபயோகமாக இருக்குமே என்பதற்காக இதோ அது..!


எழுதியவர்: எழுத்தாளர் சி.வி. ராஜன்

பொத்தகம் தான் உண்மையான தமிழ் என்று சொந்தத் தகுதியில் நான் பொத்து --> பொத்தகம் என்று வந்தது என்று நீண்ட விளக்கம் கொடுத்தால் என் பதிலுக்கு ஆதரவு வாக்குகள் எகிறும்; ஆனால் 'புஸ்தக்' என்பதிலிருந்து புத்தகம் வந்தது, பொத்தகம் என்பது புத்தகத்தின் கொச்சை மொழி என்றால் இங்கே எதிர் வாக்கு போடுபவர்கள் உண்டு!

எனவே நானும் பொத்திக்கொண்டிருக்காமல் , என் புத்திக்கெட்டிய விளக்கத்தை 'பொத்து' என்பதிலிருந்தே ஆரம்பிக்கிறேன்!

பொத்து -- ஓட்டையிடு. பழைய நூல்களில், சுவடிகளில் பூச்சி (செல்) அறித்துப் பார்த்திருப்பீர்கள். அதாவது பூச்சிகள் நூல்களில் 'பொத்தல்' இடுகின்றன. அகம் என்றால் வீடு. அந்தப் பூச்சிகள் அந்த நூலிலேயே உண்டு உறங்கி வாழ்கின்றன அல்லவா? அதிலிருந்து தான் பொத்தகம் என்று வந்தது. புரியுதா?

இன்னும் பிரியாவிட்டால் வேறு விதத்தில் விளக்குகிறேன்.

உங்களில் எத்தனை பேருக்கு பொத்தகம் படிக்கும் ஆர்வம் இருக்கிறது? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்?

நூலகத்திலிருந்து புத்தகம் வாங்கி வருவோம்; ஆனால் படிக்காமலேயே வீட்டில் பொத்தி வைத்திருப்போம். காசு கொடுத்துப் புதுப் புத்தகம் வாங்குவோம். அதைப் பொத்திப் பொத்தி வைத்து வாசனை பார்ப்போமே தவிர சட்டென்று படித்துவிட மாட்டோம்.

நண்பன் "இதைப் படிடா, அருமையான நூல்" என்று சொல்லிக் கொடுத்தால் அதைப் பொத்தி பத்திரமாக படுக்கைக்கருகில் வைத்திருப்போம். "படிக்காவிட்டால் திரும்பித் தந்துவிடு" என்று நண்பன் கடிந்தால், "கொஞ்சம் பொருடா, இதோ படித்து விட்டுத் தந்துவிடுகிறேன்; உனக்கு என்ன அவசரம்?" என்று மீண்டும் அதைப் பொத்தி வைத்துக்கொள்வோமே தவிரத் திருப்பித் தர மாட்டோம்.

இப்படிப் பொத்திப் பொத்தி வீட்டில் வைத்திருப்பதால் அது பொத்தகம். ஆகவே அதுவே சரியான தமிழ் வார்த்தை!

எப்புடி!