பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா தள்ளிவைப்பா? இது தான் காரணமா?

Aadmika
Jun 06, 2024,05:33 PM IST

டில்லி :   மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா தற்போது ஜூன் 08ம் தேதிக்கு பதில் ஜூன் 09ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 294 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக.,விற்கு பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமாரும், ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் ஆதரவு அளிப்பதாக கூறி உள்ளனர். இதனால் மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. மீண்டும் இந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு உலக தலைவர்கள் பலரும் போனில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.




பிரதமர் மோடி, ஜூன் 08ம் தேதி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதனால் புதிய அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை ஒதுக்குவது என்பது தொடர்பாக டில்லியில் பாஜக முக்கிய தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் கூடி ஆலோசித்து வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா ஜூன் 08ம் தேதிக்கு பதில், தற்போது ஜூன் 09ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


புதிய மத்திய அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதில் இன்னும் இழுபறியான நிலையே இருந்து வருதாம். அமைச்சரவை பட்டியல் இறுதி செய்ய முடியாததால் பதவியேற்பு விழாவை ஒரு நாள் தள்ளி வைத்துள்ளார்களாம். அது மட்டுமல்ல மோடியின் பதவியேற்பு விழாவில் வங்கதேச பிரதமர், நேபாள பிரதமர் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளார்களாம். இன்னும் 2 நாட்களில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்வது கடினம் என்பதாலும் மோடியின் பதவியேற்பு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.