BREAKING: புதுச்சேரி லோக்சபா தொகுதியில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியா?

Su.tha Arivalagan
Feb 03, 2024,09:09 PM IST

புதுச்சேரி:  புதுச்சேரி லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாக ஒரு பரபரப்பான தகவல் உலா வருகிறது.


புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி வைத்து ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் இந்தத் தொகுதியில் பாஜக போட்டியிட விரும்புவதாக என். ஆர்.காங்கிரஸ் கட்சியிடம் தெரிவித்து அவர்களிடமிருந்து சீட்டையும் பெற்று விட்டது.


பாஜக வேட்பாளர் யார்?


தற்போது பாஜக வேட்பாளர் யார் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. மிக மிக முக்கியப் புள்ளி போட்டியிடப் போவதாக இன்று பிற்பகல் முதல் செய்தி அடிபட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த முக்கியப் புள்ளி யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.


இப்படிப்பட்ட நிலையில் அந்தத் தொகுதியில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாக ஒரு வலுவான தகவல் புதுச்சேரியிலிருந்து பறக்க ஆரம்பித்துள்ளது. தமிழிசை செளந்தரராஜன் தற்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருக்கிறார். தெலங்கானா ஆளுநராகவும் இருக்கிறார். ஆளுநராக இருப்பவர்கள் அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு தீவிர அரசியலுக்கு வருவது இயல்புதான். பல முன்னுதாரணங்கள் உள்ளன.


டாக்டர் தமிழிசை போட்டியிட வாய்ப்பு?




எனவே தமிழிசையும் அது போல வரவிருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் டெல்லி சென்றுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். அந்த சந்திப்பு எது தொடர்பானது என்று தெரியவில்லை. ஆனால் இதுதொடர்பாக தமிழிசை போட்டுள்ள டிவீட்டில், மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா அவர்களை டெல்லியில் சந்தித்து புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து  கலந்துரையாடினேன் என்று தெரிவித்துள்ளார்.


அமித்ஷா அவசர  அழைப்பின் பேரில்தான் அவரை தமிழிசை செளந்தர்ராஜன் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் தமிழிசை செளந்தர்ராஜன், புதுச்சேரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாகவும் இந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழ்நாட்டில் முகம் கொடுத்தவர்


தமிழ்நாட்டில் பாஜகவுக்கு தனி இமேஜ் உருவாக முக்கியக் காரணமாக இருந்தவர் டாக்டர் தமிழிசைதான். அவர் தலைவராக இருந்தபோதுதான் பாஜகவின் பக்கம் பலருக்கும் ஈர்ப்பு வர காரணமாக அமைந்தார். "அக்கா" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் தமிழிசை, கடந்த லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டார். அங்கு திமுக வேட்பாளரான கனிமொழியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதையடுத்தே அவர் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் புதுச்சேரி துணை ஆளுநராக இருந்த கிரண் பேடி அங்கிருந்து சென்றவுடன், கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு நீண்ட காலமாக இப்பொறுப்பில் இருந்து வருகிறார்.


தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரும் டாக்டர் தமிழிசை அதிரடியாக பேசவும் தவறுவதில்லை. இது விமர்சனத்துக்குள்ளான போதிலும் கூட, நான் பிறந்த ஊர் தமிழ்நாடு. எனவே எனக்குப் பேச உரிமை உள்ளது என்று அழுத்தம் திருத்தமாக கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் பாஜகவினர், அவரை வரவேற்று டிவீட்டுகள் போட ஆரம்பித்து விட்டனர்.