"2 வடை.. 4 இட்லி.. கெட்டி சட்னி".. இனி வாட்ஸ் ஆப் மூலம் ரயிலில் உணவு ஆர்டர் பண்ணலாம்!

Baluchamy
Feb 07, 2023,12:02 PM IST
சென்னை: வாட்ஸ் ஆப் மூலம் பிடித்த உணவை ஆடர் செய்து கொள்ளும் புதிய அம்சத்தை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ரயில் பயணிகளின் வசதிக்காக அறிமுகம் செய்துள்ளது.



ரயில் பயணத்தை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியுமா! ரயில் பயணத்திற்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது என சொல்லலாம். கையில் வேர் கடலையுடன் ஜன்னல் அருகே கற்றுவாங்கிக்கொண்டு பயணிக்கும் சுகமே தனி..  

காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை ரயில் தடம் படாத இடமே இல்லை. இந்தியா முழுவதும் ஏராளமான ரயில்கள் மண் புழுவை போல் ஊர்ந்துகொண்டிருக்கிறது. லோக்கல் ரயில் முதல் மாநிலத்திற்கு மாநிலம் தாண்டும் எக்ஸ்பிரஸ் வரை எக்கச்சக்கமான ரயில்கள் நாள்தோறும் தனது சேவையை பயணிகளுக்கு அர்ப்பணித்து வருகிறது.

அந்தவகையில் இந்திய ரயில்வே துறை மிக சிறப்பாக தனது சேவையை பயணிகளுக்கு கொடுத்து வருகிறது. நாள்தோறும் கோடிக்கணக்கானோர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். நெடுந்தூரம் செல்லும் பயணிகள் பசியாற ரயில்வே கேட்டரிங் சர்வீஸ்  ரயில்களுக்குள்ளேயே எறும்புகளை போல் ஊர்ந்து பயணிகளுக்கு சேவை செய்து வருகின்றனர்.

மேலும் இதனை மேம்படுத்தும் விதமாக இ-கேட்டரிங் முறை மூலம் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவை பெரும் வசதியை ரயில் கேட்டரிங் துறை அறிமுகம் செய்தது.http://www.ecatering.irctc.co.in என்ற வெப் சைட் மூலம் தங்களுக்கு தேவையான உணவுகளை மெசேஜ் செய்து உணவை பெற்றுக்கொள்ளும் நடைமுறை இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது இந்த இ-கேட்டரிங் சர்வீஸ் மேலும் மேம்படுத்தப்பட்டு AI chatbot என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், நாம் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் செய்வது போல் ரயில் பயணிகளின் தேவைகளை AI chatbot மெசேஜ் மூலம் பதிலளிக்கும். இதன் மூலம் பயணிகளுக்கு தேவையான உணவுகளை தகுந்த நேரத்தில் தகுந்த இடத்திற்கு சேவையை வழங்கும் முறையை இந்திய ரயில்வே தற்போது அறிமுகம் செய்துள்ளது. 

இதுவரை இ-கேட்டரிங் சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 50,000 உணவுகள் வழங்கப்பட்டுவருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.