ஹிஜாப் அணிய மறுத்து.. அரை நிர்வாணப் போராட்டத்தில் குதித்த ஈரான் மாணவி.. டெஹரானில் பரபரப்பு!

Su.tha Arivalagan
Nov 03, 2024,04:25 PM IST

டெஹரான்: ஈரான் தலைநகர் டெஹரானில் உள்ள இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழக மாணவி ஒருவர் ஹிஜாப் அணிய மறுத்து, அரை நிர்வாண கோலத்தில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணை பின்னர் போலீஸார் கைது செய்தனர்.


ஈரானில் ஹிஜாப் அணிய மறுத்து பெண்களிடையே எதிர்ப்பும் போராட்டமும் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழக மாணவி ஒருவர் ஹிஜாப் அணிய மறுத்து பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளார். அவரை நன்னெறிக் காவலர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலர் டீஸ் செய்து, ஹிஜாப் அணியுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் வெகுண்ட அந்தப் பெண் தான் அணிந்திருந்த ஆடையை அத்தனை பேர் முன்பும் கழற்றினார். வெறும் உள்ளாடைகளுடன் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் குதித்தார்.




உள்ளாடைகளுடன் அவர் அங்குமிங்கும் நடமாடியதால் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியாக்கள் சமூக ஊடகளில் பரவி சர்வதேச அளவில் இது பிரச்சினையாக உருவெடுத்தது. அவரது இந்தப் போராட்டத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்து கருத்துக்களைப் பகிர ஆரம்பித்தனர்.


இந்த நிலையில் ஈரான் போலீஸார் தற்போது அந்தப் பெண்ணைக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார், என்ன ஆனார் என்ற விவரம் தெரியவில்ல. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஆம்னஸ்டி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


அவர் கைது செய்யப்பட்டபோது காவலர்கள் சிலர் அப்பெண்ணை கடுமையாக அடித்ததாகவும், சித்திரவதை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்தப் பெண்ணை யாரும் சித்திரவதை செய்யவில்லை என்றும், அப்பெண்ணுக்கு மன ரீதியாக பிரச்சினை உள்ளதாகவும் பல்கலைக்கழக பொது செய்தி தொடர்பு இயக்குநர் சையத் அமீர் மெஹஜாப் தெரிவித்துள்ளார். அப்பெண்ணை மன நல மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்