ஈரானின் அதிரடி ஏவுகணைத் தாக்குதலில்.. மொசாத் அலுவலகம் அருகே பரபரப்பு.. ஷாக்கில் இஸ்ரேல்!
டெல்அவிவ்: கிட்டத்தட்ட மிகப் பெரிய போருக்கான முஸ்தீபுகள் மத்திய கிழக்கில் காணப்படுகிறது. மிகப் பெரிய அளவிலான முழு அளவிலான போரில் பல நாடுகள் இறங்கக் கூடிய அபாயகரமான சூழலை இஸ்ரேலும், அதன் எதிர்ப்பு நாடுகளும் உருவாக்கிக் கொண்டுள்ளன. இந்தப் போர் சர்வதேச அளவில் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கக் கூடிய அபாயங்களும் எழுந்துள்ளன.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தற்போது இஸ்ரேல் - இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான போராக மாறத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் - லெபனான் நாடுகள் மோதிக் கொண்டுள்ளன. இந்த நிலையில் தற்போது ஈரானும் நேரடியாக களத்தில் குதித்துள்ளது. இஸ்ரேலின் பல முக்கிய நிலைகளைக் குறி வைத்து ஈரான் ராணுவம், 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்கியது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. பின்விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரான் மிகப் பெரிய தவறு செய்து விடடது, அதற்கான தண்டனையை அது அனுபவித்தே தீரும் என்று இஸ்ரேலும் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள விஷயம் என்னவென்றால், ஈரான் ஏவிய ஏவகணைகளில் ஒன்று டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாத்தின் தலைமை அலுவலகம் அருகே வந்து விழுந்து வெடித்தது. இதனால் அந்த இடத்தில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. கட்டடத்தில் அந்த ஏவுகணை விழுந்திருந்தால் கட்டடத்திற்கு மிகப் பெரிய சேதம் ஏற்பட்டிருக்கக் கூடும். இந்த தாக்குதலால் இஸ்ரேல் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இஸ்லாமிய நாடுகளின் மிகப் பெரிய வில்லனே இந்த மொசாத்தான். குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் நடந்த பல்வேறு அரசியல் படுகொலைகளின் பின்னணியில் மொசாத் இருப்பதாக அந்த நாடுகள் நம்புகின்றன. ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த சம்பவத்திலும் கூட மொசாத்தின் சதியே இருப்பதாகவும் ஒரு கருத்து உண்டு.
இப்படி இஸ்லாமியர்களின் மிகப் பெரிய எதிரியாக உள்ள மொசாத்தின் அலுவலகத்திற்கு அருகே வந்து ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதை இஸ்ரேலால் ஜீரணிக்கவே முடியவில்லை. மொசாத் அலுவலகத்திலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹெர்ஸ்லியா என்ற இடத்திலிருந்து உயர்ந்த கட்டடத்திலிருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
தாக்குதலுக்குள்ளான பகுதியில் ஒரு தியேட்டரும் உள்ளது. ஒரு வேளை தியேட்டருக்குள் ஏவுகணை போய் விழுந்திருந்தால் அங்கு பெரும் உயிர்ப்பலி ஏற்பட்டிருக்கக் கூடும். ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் நகரங்கள் அனைத்திலும், ராணுவம் அபாய சங்குகளை ஒலிக்க விட்டது. இதையடுத்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். பலர் பங்கர்களில் பதுங்கும் நிலையும் ஏற்பட்டது. மொத்த இஸ்ரேலையும் ஈரானின் தாக்குதல் உலுக்கிப் போட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்ம.
ஈரான் ஏவிய பல ஏவுகணைகளை இஸ்ரேலின் ஏவுகணைத் தடுப்பு அழிப்பு ஏவுகணைகள் வானிலேயே அழித்து விட்டன. இதனால் பெரிய அளவிலான பாதிப்பை இஸ்ரேல் சந்திக்கவில்லை. அதிலிருந்து தப்பிய சில ஏவுகணைகள்தான் உள்ளே வந்து விழுந்தன. அதிலும் கூட பெரிய அளவில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
ஈரானின் இந்த கோபாவேச தாக்குதலுக்குக் காரணம் உள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, ஹமாஸ் தலைநர் இஸ்மாயில் ஹனியே ஆகியோரின் கொலைகளுக்குக் காரணம் இஸ்ரேல்தான் என்று ஈரான் நம்புகிறது. இருவரும் ஈரானில் வைத்துக் கொல்லப்பட்டனர். இதனால்தான் ஈரான் கடும் ஆவேசமடைந்து இஸ்ரேல் மீது கை வைத்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி கூறுகையில், நமது காலத்தின் ஹிட்லரான நதன்யாகு தனது குரூரமான, மோசமான தாக்குதல்களையும், பதட்டத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கும். எங்களை அவர் எச்சரிப்பது இருக்கட்டும். முதலில் அவர்களது நாட்டில் ஏற்படும் பின்விளைவுகளை சமாளிக்க அவர்கள் தயாராகட்டும் என்று எச்சரித்துள்ளார்.
ஈரான் எதைச் செய்தாலும் அதை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் அமெரிக்கா, இப்போதும் கூட இஸ்ரேலுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று அது கூறியுள்ளது. நிலைமையை வைத்துப் பார்க்கும்போது மிகப் பெரிய போரை உலகம் சந்திக்கப் போவதாகவே தோன்றுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்