ஐபிஎல் ஏலத்தில் புதிய வரலாறு.. ரூ. 20.50 கோடிக்கு ஏலம் போனார் பேட் கமின்ஸ்.. சன்ரைசர்ஸ் அசத்தல்!

Su.tha Arivalagan
Dec 19, 2023,09:13 PM IST

துபாய்:  ஐபிஎல் ஏலத்தில் இன்று புதிய வரலாறு படைக்கப்பட்டது. மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போன முதல் வீரர் என்ற பெயரை பாட் கமின்ஸ் படைத்தார். ரூ. 20.50 கோடிக்கு அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்து மிரட்டி விட்டது.


ஆஸ்திரேலிய வீரரான பாட் கமின்ஸ் 18 வயது முதல் கிரிக்கெட் ஆடி வருகிறார். அட்டகாசமான வீரர் இவர்.  ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கேப்டனாக அசத்தியவர்.  அவரது டெஸ்ட் அறிமுகத்திலேயே 7 விக்கெட்களை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியவர்.  ஆஸ்திரேலிய அணியில்  மிகவும் இளம் வயது வீரராக அறிமுகமாகியவர் பாட் கமின்ஸ்.


இடையில் சில காலம்  காயம் காரணமாக விளையாட முடியாமல் இருந்தவர், அதிலிருந்து மீண்டு வந்து அசத்தியவர். சில காலம் உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்து வீச்சாளராக ஜொலித்தவர்.  இப்படி பல்வேறு பெருமைகளுடன் வலம் வரும் அவர் சமீபத்திய உலகக் கோப்பைத் தொடரிலும் அட்டகாசமான பெர்பார்மன்ஸைக் கொடுத்தார்.




இன்று அவரை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது மொத்த பர்ஸும் காலியானாலும் பரவாயில்லை.. கமின்ஸை எடுத்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் அவர்களது கையிருப்பு கிட்டத்தட்ட காலியாகும் நிலையை நெருங்கியும் கூட அவர்கள் விடவில்லை. கடைசியில் ரூ. 20.50 கோடிக்கு ஏலம் போனார் கமின்ஸ். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்த அளவுக்கு இவரை விலை கொடுத்து வாங்கியது மற்ற அணியினரை வியப்பில் ஆழ்த்தியது.


ஐபிஎல் தொடர்களில் இதற்கு முன்பு இதுபோ மிகப் பெரிய விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பலரும் சோபித்ததில்லை. ஆனால் பேட் கமின்ஸ் அந்த வரலாற்றை மாற்றியமைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.