ஐபிஎல் கிரிக்கெட் 2025 : ஸ்டைலா.. அசத்தலா 56 வது அரைசதத்தை எட்டிய விராட் கோலி
Mar 22, 2025,10:42 PM IST
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட்டில் தன்னுடைய 56 வது அரைசதத்தை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஸ்டார் வீரர் விராட் கோலி.
2025ம் ஆண்டிற்கான ஐபிஎல் டி-டுவென்டி கிரிக்கெட் தொடர் இன்று துவங்கி உள்ளது. இதன் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. 2025ம் ஆண்டிற்கான முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் அடித்தது. 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூரு அணி.
தொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி 30 பந்துகளில் 50 ரன்களைத் தாண்டி அசத்தினார். இது ஐபிஎல் கிரிக்கெட்டில் இவர் அடிக்கும் 56வது அரைசதம் ஆகும். விராட் கோலி, இதுவரை 252 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 8004 ரன்கள் அடித்துள்ளார். இதுவரை 56 அரை சதம் மற்றும் 6 சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அதிகபட்சமாக 2016ம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 973 ரன்கள் குவித்திருந்தார் கோலி.
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் 143 போட்டிகளில் பெங்களுரு அணியின் கேப்டனாக விராட் கோலி விளையாடி உள்ளார். இவர் தலைமையில் பெங்களூரு அணி விளையாடி 70 போட்டிகளில் 66 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2016 ல் பைனல் வரை சென்றது. இந்த ஆண்டு ரஜத் படீதார் தலைமையலான பெங்களூரு அணி முதல் போட்டியிலேயே வெற்றியுடன் கலக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக விராட் கோலி முதல் போட்டியிலேயே அரை சதம் போட்டது ரசிகர்களை ஹேப்பியாக்கியுள்ளது.